என்னை ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கவைக்க சதி: மல்யுத்த வீராங்கனை குற்றச்சாட்டு
உதவி செய்வதற்கு யாரும் தயாராக இல்லை. விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையில் இப்படி தான் விளையாடுவதா?.
புதுடெல்லி,
இந்திய முன்னாள் மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்துவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் இந்திய மல்யுத்த நட்சத்திரங்கள் பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் மாதக்கணக்கில் போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து பிரிஜ் பூஷன் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து அவர் மல்யுத்த சம்மேளன பொறுப்பில் இருந்தும் ஒதுங்கினார்.மல்யுத்த சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தலில் தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டார். பிரிஜ் பூஷனின் கூட்டாளியான இவருக்கும் சில வீரர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் முன்னணி மல்யுத்த வீராங்கனை 29 வயதான வினேஷ் போகத், தன்னை ஊக்கமருந்து வலையில் சிக்கவைக்க சதி நடப்பதாக பரபரப்பான புகார் ஒன்றை கூறியுள்ளார். வினேஷ் போகத், உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்றவர்.
50 கிலோ எடைப்பிரிவில் ஒலிம்பிக் இடத்தை உறுதி செய்யும் இலக்குடன் அடுத்த வாரம் கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக் நகரில் நடைபெறும் ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்றில் பங்கேற்க உள்ளார். வினேஷ் போகத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பிரிஜ் பூஷனும், அவரது விசுவாசியான சஞ்சய் சிங்கும் இணைந்து நான் ஒலிம்பிக்கில் பங்கேற்பதை தடுக்க எல்லா வழியிலும் முயற்சிக்கிறார்கள். அணியில் நியமிக்கப்பட்டுள்ள எல்லா பயிற்சியாளர்களும் அவர்களது ஆதரவாளர்கள். எனவே எனக்குரிய போட்டியின்போது அவர்கள் நான் குடிக்கும் தண்ணீரில் ஏதாவது கலந்து கொடுக்க வாய்ப்புள்ளது.
என் மீது ஊக்கமருந்து மோசடி பேர்வழி என்ற முத்திரை குத்துவதற்கு சதிவேலை நடக்கிறது. கடந்த ஒரு மாத காலமாக எனது பயிற்சியாளர் மற்றும் பிசியோவுக்கு அங்கீகார அட்டை வழங்கும்படி இந்திய விளையாட்டு ஆணையத்திடம் (சாய்) முறையிட்டு வருகிறேன். அங்கீகார அட்டை இல்லாவிட்டால் அவர்களால் என்னுடன் போட்டி நடக்கும் இடத்திற்கு வர முடியாது. பல முறை கேட்டும் அவர்களிடம் இருந்து எனக்கு முறையான பதில் வரவில்லை.
உதவி செய்வதற்கு யாரும் தயாராக இல்லை. விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையில் இப்படி தான் விளையாடுவதா?. போட்டிக்கு முன்பாக எங்களை மனரீதியாக துன்புறுத்துகிறார்கள். தவறுக்கு எதிராக குரல் கொடுத்தால் நம் நாட்டில் இதுதான் தண்டனையா? தேசத்துக்காக விளையாட செல்லும் முன்பு எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்' என்றார்.
இதற்கிடையே வினேஷ் போகத்தின் குற்றச்சாட்டை இந்திய மல்யுத்த சம்மேளனம் மறுத்துள்ளது. பெயர் வெளியிட விரும்பாத மல்யுத்த சம்மேளன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தனது தனிப்பட்ட பயிற்சியாளர் மற்றும் பிசியோவுக்கு அங்கீகார அனுமதி அட்டை கேட்டு கடந்த மார்ச் 18-ந்தேதி வினேஷ் போகத் இ-மெயில் அனுப்பினார்.
ஆனால் அதற்கு முன்பாகவே (மார்ச் 11) உலக மல்யுத்த சம்மேளனத்திற்கு அனுப்புவதற்கான காலக்கெடு முடிந்து விட்டது. அவர் தாமதமாக விண்ணப்பித்ததால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏற்கனவே 9 பயிற்சியாளர்கள் அணியினருடன் செல்லும் நிலையில் கூடுதல் பயிற்சியாளர் தேவையா?, வினேஷ் போகத் தனிப்பட்ட பயிற்சியாளர் வேண்டும் என்று நினைத்தால், உலக மல்யுத்த சம்மேளனத்தை அணுகி முயற்சித்து பார்க்கலாம். அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.