பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணி தகுதி பெறும் : சரத் கமல்
தரவரிசை அடிப்படையில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றால் ஒற்றையர் பிரிவில் ஆடுவேன் என்று சரத் கமல் கூறினார்.
சென்னை,
சென்னை நேரு ஸ்டேடியத்தில் இயங்கி வரும் எஸ்.டி.ஏ.டி.- ஏ.கே.ஜி. டேபிள் டென்னிஸ் அகாடமி முன்னணி டேபிள் டென்னிஸ் வீரர், வீராங்கனைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதன் ஒரு அங்கமான எஸ்.டி.ஏ.டி.-எஸ்.கே. அகாடமியை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவரும், ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றவருமான இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சென்னையை சேர்ந்த சரத் கமல் கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த அகாடமியில் பயிற்சி பெறும் திறமையான வீரர், வீராங்கனைகளுக்கு சர்வதேச தரத்துக்கு இணையான நவீன பயிற்சி வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க லக்ஷயா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி திறமையான இளம் வீரர்கள் அடையாளம் காணப்பட்டு ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர்களுக்கு உயர்தரமான பயிற்சி வசதிகளுடன், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வதற்கு போதுமான வசதி வாய்ப்புகள் செய்து கொடுக்கப்படும். வீரர்கள் மனதளவில் வலுவாக இருக்க சிறப்பு மனநல பயிற்சியும் அளிக்கப்படும். இந்த புதிய பயிற்சி திட்ட அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.
பின்னர் 41 வயதான சரத் கமல் நிருபர்களிடம் பேசுகையில், 'உலக அணிகள் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் அடுத்த மாதம் (பிப்ரவரி 16-25) நடக்கிறது. இதில் இந்திய அணி 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. அந்த பிரிவில் போலந்து தான் கடும் சவாலாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த போட்டியில் கால்இறுதிக்கு முன்னேறினால் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடைபெறும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நமது அணியால் நேரடியாக தகுதி பெற முடியும். கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தாலும் தகுதி அடைய லேசான வாய்ப்புள்ளது. இந்த போட்டியின் மூலம் இந்திய அணியால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி காண முடியும் என்று நம்புகிறேன்.
தற்போது எனது முழு கவனமும் உலக டேபிள் டென்னிஸ் போட்டி மீது தான் உள்ளது. நான் ஒற்றையர் பிரிவில் கவனம் செலுத்த விரும்பவில்லை. ஒற்றையர் பிரிவில் விளையாட நம்மிடம் தகுதியான இளம் வீரர்கள் இருப்பதால் அவர்களுக்கு வழிவிடும் வகையில் நான் இரட்டையர் பிரிவில் பங்களிக்க விரும்புகிறேன். பாரீஸ் ஒலிம்பிக் தகுதிக்கான ஒற்றையர் பிரிவு போட்டிகளிலும் கலந்து கொள்ளும் திட்டமில்லை. ஒரு வேளை தரவரிசை அடிப்படையில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றால் ஒற்றையர் பிரிவில் ஆடுவேன்' என்று தெரிவித்தார்.