காமன்வெல்த்: பதக்கங்களை வென்ற விஜய் குமார் யாதவ், சுசீலா தேவிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
காமன்வெல்த் போட்டியில் பதக்கங்களை வென்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான (60 கிலோ) ஜூடோவில் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் விஜய் குமார் யாதவ் சைப்ரஸின் பெட்ரோஸ் கிறிஸ்டோடூலிடைசை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
முன்னதாக மகளிர் ஜூடோ 48 கிலோ எடைப்பிரிவின் இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் மைக்கேலா வைட்பூவிடம் வீழ்ந்து சுசிலா தேவி வெள்ளி பதக்கம் வென்றார்.
இந்நிலையில் காமல்வெல்த் போட்டியில் பதக்கங்களை வென்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "சுசீலா தேவி லிக்மாபாமின் சிறப்பான பங்களிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியது. அவர் வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்துகள். அவர் குறிப்பிடத்தக்க திறமை மற்றும் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அவளுடைய எதிர்கால முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
தனது மற்றொறு டுவிட்டர் பதிவில், "விஜய் குமார் யாதவ் காமல்வெல்த் போட்டியின் ஜூடோவில் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவரது வெற்றி இந்தியாவின் எதிர்கால விளையாட்டுக்கு நல்ல முன்னோடியாக உள்ளது. வரும் காலங்களில் அவர் வெற்றியின் புதிய உயரங்களைத் தொட வேண்டும்" என்று அதில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.