செஸ் ஒலிம்பியாட் - இந்திய ஓபன் பி அணியில் விளையாடிய போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றி
இந்தியாவின் 2வது அணி பிரிவில் விளையாடிய தமிழக வீரர் குகேஷும் வெற்றி பெற்றுள்ளார்.
மாமல்லபுரம்,
44 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று ஆட்டம் மாமல்லபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றது.
இந்திய 'பி' அணியில் இடம் பெற்றுள்ள பிரக்ஞானந்தாவுக்கு நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ஒய்வு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று 2வது சுற்று ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா இன்று களமிறங்கினார்.
அவர் எஸ்டோனியா அணி வீரர் கிரில் சுக்காவை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களை கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா 41 வது நகர்த்தலில் வெற்றி பெற்று அசத்தினார். இந்திய ஓபன் பி அணியில் விளையாடிய மற்றொரு தமிழக வீரர் அதிபன் பாஸ்கரனும் வெற்றிபெற்று உள்ளார்.
அதேபோல இந்தியாவின் 2வது அணி பிரிவில் விளையாடிய தமிழக வீரர் குகேஷும் வெற்றி பெற்றுள்ளார். அவர் எஸ்டோனியா வீரர் கிக் கால்லேவுக்கு எதிரான போட்டியில் 39வது நகர்த்தலில் வெற்றிபெற்று அசத்தினார்.