செஸ் விழிப்புணர்வு போட்டி
பாவூர்சத்திரத்தில் செஸ் விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது
பாவூர்சத்திரம்:
மும்பை இந்திய பேனா நண்பர் பேரவை இணை அமைப்பு ஐ.பி.எல். செஸ் அகாடமி சார்பில் பாவூர்சத்திரத்தில் செஸ் விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது. தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டிகள் புதிய வீரர்களுக்கு தனிப்பிரிவு, இளம்வீரர்கள் பிரிவு, மூத்த வீரர்கள் பிரிவு என 3 வகையாக நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் 6 சுற்று போட்டிகள் நடைபெற்றது.
போட்டியை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் தொடங்கி வைத்தார். 6 சுற்றுகளின் முடிவில் புதிய வீரர்கள் பிரிவில் தூத்துக்குடி மாவட்ட வீரர் ஹரிவிக்னேஷ், போட்டி அனுபவ இல்லாத புதியவர்கள் பிரிவில் தூத்துக்குடி மாவட்ட வீரர் ஸ்ரீவர்சன், ஜுனியர் பிரிவில் ரெட்டியார்பட்டி கிராம கமிட்டி பள்ளி மாணவன் ஜெனிசன் நெஸ்டர், சீனியர் பிரிவில் சங்கரன்கோவில் கோமதி அம்மாள் பள்ளி மாணவன் ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர் முதலிடம் பெற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் ரொக்கப்பரிசுடன், சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை ஐ.பி.எல். செஸ் அகாடமி இயக்குனர் கண்ணன் செய்திருந்தார்.