சென்னை பல்கலைக்கழக தடகளம்: லயோலா, எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி 'சாம்பியன்'
சென்னை பல்கலைக்கழக தடகள போட்டியில் ஆண்கள் பிரிவில் லயோலா கல்லூரியும், பெண்கள் பிரிவில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.
சென்னை,
சென்னை பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கான 54-வது ஏ.எல். முதலியார் பொன்விழா நினைவு தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது.
இதில் 3-வது மற்றும் கடைசி நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான மினி மராத்தான் போட்டியில் லயோலா கல்லூரி வீரர் அபிஷேக் சோனி (1 மணி 8.42 வினாடி) புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். அவர் கடந்த ஆண்டு லயோலா வீரர் பிரகதீஸ்வரன் ( 1 மணி 12.48 வினாடி) படைத்து இருந்த சாதனையை தகர்த்தார்.
110 மீட்டர் தடை ஓட்டத்தில் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி வீரர் நிஷாந்த் ராஜா (14 வினாடி) புதிய போட்டி சாதனையுடன் முதலிடம் பிடித்தார். இதேபோல் டெக்கத்லானில் லயோலா வீரர் யாமன்தீப் ஷர்மா (6,854 புள்ளி) புதிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
நீளம் தாண்டுதலில் லோகேஸ்வரனும் (லயோலா), 200 மீட்டர் ஓட்டத்தில் ராகுல் குமாரும் (டி.ஜி.வைஷ்ணவா), வட்டு எறிதலில் சூர்யா பிரகாஷ்சும் (லயோலா), 1,500 மீட்டர் ஓட்டத்தில் அபிஷேக் சிங் தாக்குரும் (லயோலா), உயரம் தாண்டுதலில் மோதி அருணும் (டி.ஜி.வைஷ்ணவா) முதலிடத்தை பெற்றனர்.
பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி வீராங்கனை கவிதா (4 நிமிடம் 30.38 வினாடி) புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதேபோல் மினி மராத்தானில் எம்.ஓ.பி.வைஷ்ணவா வீராங்கனை லதா (1 மணி 27.37 வினாடி) புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். நீளம் தாண்டுதலில் ஷெரினும் (லயோலா), ஹெப்டத்லானில் தீபிகாவும் (எம். ஓ.பி. வைஷ்ணவா) முதலிடம் பிடித்தனர்.
இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 12 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலப்பதக்கம் வென்ற லயோலா கல்லூரி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. அந்த அணி பட்டத்தை வெல்வது இது 42-வது முறையாகும். 7 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலப்பதக்கத்துடன் டி.ஜி.வைஷ்ணவா 2-வது இடம் பெற்றது. பெண்கள் பிரிவில் 14 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலப்பதக்கத்தை வென்ற எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அந்த அணி பட்டத்தை சொந்தமாக்குவது இது 18-வது தடவையாகும். 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப்பதக்கம் பெற்ற எஸ்.டி.என்.பி.வைஷ்ணவா கல்லூரி 2-வது இடத்தை பிடித்தது. சிறந்த வீராங்கனையாக சுமத்ராவும் (எத்திராஜ்), சிறந்த வீரராக அருண்குமாரும் (டி.ஜி.வைஷ்ணவா) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ். கவுரி கலந்து கொண்டு பரிசு வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் வி.மகாதேவன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.