சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்: தமிழக வீரர் குகேஷ் 'சாம்பியன்'


சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்: தமிழக வீரர் குகேஷ் சாம்பியன்
x

Image Courtesy : @ChessbaseIndia

பட்டம் வென்ற குகேஷ், அடுத்த ஆண்டு நடக்கும் கேன்டிடேட் டெஸ்ட் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

சென்னை,

8 முன்னணி கிராண்ட்மாஸ்டர்கள் பங்கேற்ற சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி சென்னையில் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது. நேற்று 7-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டங்கள் நடந்தன. இதில் சக நாட்டவர் ஹரிகிருஷ்ணாவுக்கு எதிராக கருப்பு நிற காய்களுடன் ஆடிய இந்திய வீரர் டி.குகேஷ் 31-வது காய் நகர்த்தலில் டிராவில் முடிக்க ஒப்புக் கொண்டார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் அர்ஜூன் எரிகாசி 57-வது காய் நகர்த்தலில் சனான் ஸ்ஜூகிரோவை (ஹங்கேரி) தோற்கடித்தார். பர்ஹாம் மக்சூட்லு (ஈரான்) தன்னை எதிர்த்த அலெக்சாண்டர் பிரெட்கேவுக்கு (செர்பியா) 22-வது காய் நகர்த்தலில் 'செக்' வைத்தார். லெவோன் அரோனியன் (அமெரிக்கா)- பாவெல் எல்ஜனோவ் (உக்ரைன்) இடையிலான ஆட்டம் 'டிரா'வில் முடிந்தது.

7 சுற்று முடிவில் இந்தியாவின் குகேசும் (2 வெற்றி, 5 டிரா), அர்ஜூன் எரிகாசியும் (3 வெற்றி, ஒரு தோல்வி, 3 டிரா) தலா 4½ புள்ளிகளுடன் சமநிலை வகித்தனர். இருப்பினும் வெற்றி, தோல்வி, டிரா, நேருக்கு நேர் மோதல் இவற்றை கணக்கிட்டு புள்ளி வழங்கியதில் எரிகாசியை விட குகேசின் கை சற்று ஓங்கியது. இதன் அடிப்படையில் தமிழகத்தின் குகேஷ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

எரிகாசி 2-வது இடத்தையும், 4 புள்ளியுடன் மற்றொரு இந்திய வீரர் ஹரிகிருஷ்ணா 3-வது இடத்தையும் பெற்றனர். அவர்களுக்கு முறையே ரூ.15 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.8 லட்சம் வீதம் பரிசுத்தொகையாக கிடைத்தது. பரிசுகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, முன்னாள் செஸ் உலக சாம்பியன் விசுவநாதன் ஆனந்த் ஆகியோர் வழங்கினர்.

பட்டம் வென்றதன் மூலம் 17 வயதான குகேஷ், அடுத்த ஆண்டு நடக்கும் கேன்டிடேட் டெஸ்ட் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.


Next Story