சென்னையில் பார்முலா-4 கார் பந்தயத்தை பார்க்க போறீங்களா..? இந்த பொருட்களை கொண்டு போகாதீங்க..!
பிறருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய எந்தப் பொருளும் அரங்கிற்குள் அனுமதிக்கப்படாது.
சென்னை:
சென்னையில் நாளை மறுநாள் (ஆகஸ்டு 31) தொடங்க உள்ள பார்முலா-4 கார் பந்தயம் தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) மூலம் சென்னை பார்முலா 4 ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயத்தை நடத்த உள்ளது. ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்தியாவில் முதல் இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயத்தை நடத்த உள்ளது. இதன் மூலம் தெற்காசியாவிலேயே இரவு ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நடத்தும் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது.
3.5 கிமீ சுற்றளவு கொண்ட சர்க்யூட்டில் இப்பந்தயம் நடத்தப்படுகிறது. தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் மவுண்ட் ரோடு ஆகியவற்றில் இந்த சர்க்யூட் அமைந்துள்ளது. இது தெற்காசியாவிலேயே மிக நீளமான ஸ்ட்ரீட் சர்க்யூட் எனபது குறிப்பிடத்தக்கது.
கார் பந்தயத்தை பொதுமக்கள் பார்த்து ரசிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. போட்டியை பார்க்க வரும் பார்வையாளர்கள் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், கலைவாணர் அரங்கம், சென்னை பல்கலைக்கழகம், கடற்கரை ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், போட்டியை காண வரும் பார்வையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிறருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய எந்தப் பொருளும் அரங்கிற்குள் அனுமதிக்கப்படாது. இந்த பொருட்களை சேமிப்பதற்கான எந்த ஏற்பாடும் இல்லை, மேலும் அவை அனைத்தும் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளில் பறிமுதல் செய்யப்படும், அவை திரும்பத் தரப்படமாட்டது.
தடை செய்யப்பட்ட பொருட்களின் விவரம்:
•கூர்மையான பொருள்கள் – பிளேடுகள், கத்திகள், கத்தரிக்கோல், ஆயுதங்கள், பாக்கெட் கத்திகள், பெப்பர் ஸ்பிரே, பெரிய சங்கிலிகள் போன்றவை.
•ஆயுதங்கள் - துப்பாக்கிகள், கத்திகள், சுவிஸ் ராணுவ கத்திகள் போன்றவை
•லேசர்ஸ் - லேசர் லைட்டுகள்
•விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகள் - வழிகாட்டி நாய்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட சேவை விலங்குகள் தவிர.
•ஒலி அமைப்புகள் - ஏர் ஹார்ன்கள், விசில் போன்ற சத்தம் எழுப்பக்கூடிய பொருட்கள், மெகாபோன்கள், இசைக்கருவிகள், போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள்.
•தீப்பற்றக்கூடிய பொருட்கள் – தீப்பெட்டிகள், பட்டாசுகள், எளிதில் எரியக்கூடிய திரவங்கள், மதுபானம் போன்றவை.
•போதைப்பொருள் அல்லது தடைசெய்யப்பட்ட பொருட்கள் - போட்டி நிகழ்வில் போதைப்பொருட்களை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. ஏதேனும் விதிமீறல் தெரிந்தால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.
•புகையிலை பொருட்கள்
•அங்கீகரிக்கப்படாத விளம்பர பொருட்கள் - பிளையர்கள், ஸ்டிக்கர்கள், கடற்கரை பந்துகள், பரிசுகள் போன்றவை.
•முகாம் உபகரணங்கள் - கூடாரங்கள், ஸ்லீப்பிங் பேக்ஸ், குடைகள் அல்லது நிழல் கட்டமைப்புகள் போன்றவை
•பாட்டில்கள் - எந்த வகையான திரவங்களுடனும் உள்ளே அனுமதிக்கப்படாது.
•வெளிப்புற உணவு மற்றும் பானங்கள் அனுமதிக்கப்படாது
•கண்டைனர் / தண்ணீர் பாட்டில்கள் / கண்ணாடி பாட்டில்கள் - மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள், சீல் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள், திறந்த தண்ணீர் பாட்டில்கள், டின்கள், கேன்கள்.
•டிரோன்கள் அல்லது வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்படாத பறக்கும் சாதனம்.
•புகைபிடிக்கும் சாதனங்கள்/பொருள்கள் - சீல் செய்யப்படாத சிகரெட்டுகள், லைட்டர்கள், மின்-சிகரெட் & வேப்ஸ் போன்றவை.
•தொழில்முறை ஆடியோ ரெக்கார்டிங் உபகரணங்கள் - அனைத்தும் (ஊடகங்கள்/பத்திரிகை பணியாளர்களை தவிர).
•தொழில்முறை கேமராக்கள் மற்றும் தொழில்முறை பதிவு உபகரணங்கள் - (புகைப்படம், வீடியோ, ஆடியோ) - தொழில்முறை ஜூம் லென்ஸ்கள், ஸ்டாண்டுகள், மோனோபாட்கள், ட்ரைபாட்கள், இணைப்பு குச்சிகள் (செல்பி ஸ்டிக்ஸ்) பிற வணிக உபகரணங்களுக்கு அனுமதி இல்லை.
•தனியார் வாகனங்கள் - ஸ்கேட்போர்டுகள், ரோலர்பிளேடுகள், ஸ்கூட்டர்கள், சைக்கிள்கள், வண்டிகள் அல்லது தனிப்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்கள் போன்றவை அனுமதி இல்லை.
•தனிப்பட்ட பொருட்கள்/உபகரணங்கள் - கைப்பைகள், குடைகள், லேப்டாப், லேப்டாப் பைகள், சூட்கேஸ், பெரிய மின்விசிறிகள், மோட்டார் சைக்கிள் தலைக்கவசம், தலைக்கவசங்கள் போன்றவை (பெண்களின் கைப்பைகள் மற்றும் போர்ட்டபிள் நெக் பேன்கள் தவிர)
•விற்பனையாளர் ஊர்திகள் எந்த வகையிலும் அனுமதி இல்லை
•வீசும் பொருட்கள் - தண்ணீர் பலூன்கள், முட்டை, பிளாஸ்டிக் பாட்டில் மூடிகள்
•இழிவு அடையாளங்கள் அல்லது பதாகைகள் - ஜாதி, மதம், பாலினம், மதம் மற்றும் இனத்திற்கு எதிரான புண்படுத்தும் பதாகைகள் அல்லது தவறான / பாரபட்சமான மொழி.
•அனுமதிக்கப்படாத விளம்பரம் - அங்கீகரிக்கப்படாத விளம்பரப் பொருட்கள் (வணிக லோகோக்களைக் காண்பித்தல், அமைப்பாளரின் பார்வையில், பந்தயம் தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ விளம்பரதாரரின் உரிமைகளுடன் முரண்படும் அல்லது எந்த வகையிலும் விலகும் பொருட்கள், அல்லது அமைப்பாளரின் பார்வையில், "அனுமதிக்கப்படாத விளம்பரம்" என கருதப்படும் பொருட்கள்) வணிக விளம்பரம், ஆடை, தொப்பிகள், பதாகைகள், கொடிகள் போன்றவை.
•மற்றவை - ஸ்ப்ரே பெயிண்ட்ஸ், ஃபேண்டம் ஸ்டிக் லைட்ஸ், ஹாம்மோக்ஸ், டோடெம்ஸ் போன்றவை.
இவ்வாறு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.