கேன்டிடேட் செஸ் போட்டி: குகேஷ் - பிரக்ஞானந்தா மோதிய 9-வது சுற்று ஆட்டம் டிரா
கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது.
டொராண்டோ,
உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்றுள்ளனர். 14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 9-வது சுற்று நடந்தது.
சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர்கள் டி.குகேஷ்- பிரக்ஞானந்தா இந்த சுற்றில் மோதினார்கள். இதில் குகேஷ் கறுப்பு நிற காய்களுடனும், பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினார்கள்.41-வது நகர்த்தலுக்கு பிறகு இந்த ஆட்டம் டிரா ஆனது. இருவரும் இந்த தொடரில் ஏற்கனவே மோதிய ஆட்டத்தில் குகேஷ் வெற்றி பெற்று இருந்தார். இந்த டிரா மூலம் அவர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
மற்றொரு இந்திய வீரர் விதித் குஜராத்தி 9- வது சுற்றில் வெற்றி பெற்றார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அவர் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை 36-வது நகர்த்தலுக்கு பிறகு வீழ்த்தினார். 2-வது முறையாக விதித் குஜராத்தி அவரை தோற்கடித்துள்ளார். இயன் நெபோம்னியாச்சி (ரஷியா)-அலிரேசா பிரவுசியா (பிரான்ஸ்) மற்றும் பேபியானோ (அமெரிக்கா)-நிஜத் அப்சோவ் (அஜர்பைஜான்) ஆகியோர் மோதிய ஆட்டங்களும் டிரா ஆனது.
9 சுற்றுகள் முடிவில் இயன் நெபோம்னியாச்சி, குகேஷ் ஆகியோர் தலா 5.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர். பிரக்ஞானந்தா 5 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறார். விதித் குஜாராத்தி 4.5 புள்ளிகளுடன் உள்ளார்.