கேன்டிடேட் செஸ் போட்டி: இந்திய வீரர் விதித் குஜராத்தி தோல்வி
கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரோன்டோ நகரில் நடந்து வருகிறது.
டொரோன்டோ,
உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார் என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரோன்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் 8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தங்களுக்குள் தலா 2 முறை என்று மொத்தம் 14 சுற்றில் மோத வேண்டும். லீக் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனை உலக செஸ் சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வாய்ப்பை பெறுவார்கள்.
ஆண்கள் பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் விதித் குஜராத்தி, ரஷியாவின் இயான் நெபோம்நியாச்சியை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 44-வது நகர்த்தலில் விதித் குஜராத்தி தோல்வி அடைந்தார். அவர் தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். முந்தைய ஆட்டத்தில் பிரக்ஞானந்தாவிடம் சறுக்கினார். ஹிகரு நகமுரா (அமெரிக்கா) - பிரக்ஞானந்தா (இந்தியா) இடையிலான ஆட்டம் 24-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. இதே போல் குகேஷ் (இந்தியா) - பேபியானோ காருனா (அமெரிக்கா), நிஜாத் அபாசவ் (அஜர்பைஜான்) - பிரோவ்ஜா அலிரெஜா (பிரான்ஸ்) ஆகியோர் மோதிய ஆட்டமும் டிரா ஆனது. 4-வது சுற்று முடிவில் இயான் நெபோம்நியாச்சி (3 புள்ளி) முதலிடத்தில் இருக்கிறார். டி.குகேஷ், பேபியானோ காருனா (தலா 2½ புள்ளி) அடுத்த இடத்தில் உள்ளனர்.
பெண்கள் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பி 62-வது நகர்த்தலில் நுர்க்யுல் சலிமோவாவிடம் (பல்கேரியா) தோல்வியை தழுவினார். இந்திய வீராங்கனை ஆர்.வைஷாலி - அலெக்சாண்ட்ரா கோரியாச்சினா (ரஷியா) இடையிலான மோதல் 40-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. கேத்ரினா லாக்னோ (ரஷியா) - டான் ஜோங்யி (சீனா), அன்னா முசிசக் (உக்ரைன்) - லீக் டிங்ஜி (சீனா) இடையிலான ஆட்டமும் டிராவில் முடிவடைந்தது. 4-வது சுற்று முடிவில் டான் ஜோங்யி (3 புள்ளி) முதலிடத்தில் தொடருகிறார். அலெக்சாண்ட்ரா கோரியாச்சினா (2½ புள்ளி) 2-வது இடத்தில் உள்ளார்.