கிர்கிஸ்தானில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி; 60 பேர் கொண்ட இந்திய குழு பங்கேற்பு
கிர்கிஸ்தானில் இன்று தொடங்கவுள்ள ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க 60 பேர் கொண்ட இந்திய குழு சென்று உள்ளது.
பிஷ்கேக்,
கிர்கிஸ்தான் நாட்டின் பிஷ்கேக் நகரில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று தொடங்கி நடைபெற உள்ளன. இதற்காக இந்தியா சார்பில் 60 பேர் கொண்ட குழு ஒன்று போட்டிகளில் பங்கேற்க சென்று உள்ளது.
இதன்படி, ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலும் 23 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோர் போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் மல்யுத்தம் விளையாட உள்ளனர்.
ஆடவர் பிரீஸ்டைல், மகளிர் பிரீஸ்டைல் மற்றும் ஆடவர் கிரேக்கோ-ரோமன் ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் தலா ஒவ்வொரு வயது பிரிவினரும் கலந்து கொள்வார்கள். ஒவ்வொரு வயது பிரிவினருக்கும் 10 எடை பிரிவுகள் கொண்ட போட்டிகள் உள்ளன.
இதன்படி, ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு வீரர் என்ற அடிப்படையில் மொத்தம் 60 போட்டிகளிலும் வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இன்று தொடங்கும் போட்டிகள் வருகிற 18-ந்தேதி வரை நடைபெற உள்ளன.
ஆடவர் பிரீஸ்டைல் மல்யுத்த வீரரான சாகர் ஜக்லான் (வயது 19), குறிப்பிடத்தக்க வகையில், 79 கிலோ எடை பிரிவில் 2019-ம் ஆண்டு நடந்த 15 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.
2021-ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன் போட்டியிலும் பட்டம் வென்று உள்ளார். கடந்த ஆண்டு நடந்த 20 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் அவர் வெண்கல பதக்கம் வென்றார்.
நடப்பு ஆண்டு நடந்த இப்ராகிம் முஸ்தபா ரேங்கிங் தொடருக்கான போட்டியில் இந்திய வீரர் அங்கித் குலியா, வெண்கல பதக்கம் வென்று உள்ளார். 72 கிலோ எடை பிரிவில் 2019-ம் ஆண்டு நடந்த 15 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் குலியா சாம்பியன் பட்டம் வென்றார்.
முந்தின ஆண்டுகளில் நடந்த 23 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகளில் இந்திய வீரர்கள் ரோகித் தஹியா, விகாஸ் மற்றும் நித்தேஷ் ஆகியோர் வெண்கல பதக்கங்களை வென்று உள்ளனர்.