ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி; இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி
ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி 2023-ல் ஈரானை வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளது.
பூசன்,
தென் கொரியாவின் பூசன் நகரில் ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், இந்தியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை சேர்ந்த அணிகள் இன்று விளையாடின.
இந்த போட்டியில் ஈரானை 33-28 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளது. முதல் அரைநேர ஆட்டத்தின்போது, இந்தியா 19-9 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது.
எனினும், நடப்பு ஆசிய போட்டிகளுக்கான சாம்பியனான ஈரான் அணி மீண்டு எழுந்து வந்து, அதிரடியாக விளையாட தொடங்கியது.
ஆனால், போட்டி நிறைவடைய 30 வினாடிகள் இருந்தபோது, இந்திய அணியின் அர்ஜுன் தேஷ்வால் 2 புள்ளிகளை கைப்பற்றியது, இந்தியா 5 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியது.
போட்டியின்போது, அணியின் கேப்டன் பவன் ஷெராவத் அதிரடியாக விளையாடி, மொத்த புள்ளிகளில் 16 புள்ளிகளை இந்தியாவுக்கு சேர்த்து தந்து உள்ளார். இதனால், இந்திய அணி தொடக்கம் முதல் முன்னிலை வகித்தது.
இந்தியா போட்டி தொடக்கத்தில் இருந்து, ஜப்பான், கொரியா மற்றும் சீன தைபே ஆகிய அணிகளை அடுத்தடுத்து வரிசையாக வீழ்த்தி இருந்தது. இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி ஹாங்காங் அணிக்கு எதிராக நாளை இறுதி லீக் போட்டியில் விளையாடி விட்டு, பின்னர் அந்த அணிக்கு எதிராக அதே நாளில் இறுதி போட்டியில் விளையாட உள்ளது.