ஆசிய விளையாட்டு போட்டி: குதிரையேற்றத்தில் இந்தியா தங்கம் வென்று சாதனை
ஆசிய விளையாட்டு போட்டியின் குதிரையேற்றத்தில் 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது.
ஹாங்சோவ்,
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் 4-வது நாளான நேற்று நடந்த குதிரையேற்றம் போட்டியின் 'டிரஸ்சேஜ்' அணிகள் பிரிவில் அனுஷ் அகர்வாலா, ஹிரிடாய் விபுல் செடா, திவ்யாகீர்த்தி சிங், சுதிப்தி ஹஜெலா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 209.205 புள்ளிகள் குவித்து முதலிடத்தை பிடித்தது. வீரர், வீராங்கனைகள் குதிரையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து அதை மைதானத்தில் துல்லியமாக அசைந்தும், நளினமாக நடைபோட வைத்தும் அபாரமாக செயல்பட்டதால் இந்தியாவுக்கு இந்த தங்கப்பதக்கம் கிட்டியது. 1982-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் குதிரையேற்றத்தில் 3 தங்கம் வென்ற இந்தியா அதன் பிறகு குதிரையேற்றத்தில் தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். அதாவது 41 ஆண்டுக்கு பிறகு மீண்டும் அசத்தி இருக்கிறது. சீனா (204.882 புள்ளி) வெள்ளிப்பதக்கமும், ஹாங்காங் (204.852 புள்ளி) வெண்கலப்பதக்கமும் பெற்றன.
பெண்களுக்கான 'டிங்கி' என்ற சிறிய ரக பாய்மரப்படகு போட்டியில் 11 ரேஸ் முடிவில் 27 புள்ளிகள் பெற்ற மத்தியபிரதேசத்தை சேர்ந்த 17 வயது இந்திய வீராங்கனை நேகா தாக்குர் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கினார். தாய்லாந்து வீராங்கனை நோப்பாஸ்சோர்ன் குன்பூன்ஜன் (16 புள்ளி) தங்கப்பதக்கத்தையும், சிங்கப்பூர் வீராங்கனை கெய்ரா மேரி (28 புள்ளி) வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர். பாய்மரப்படகு போட்டியை பொறுத்தமட்டில் மற்ற போட்டிகளை போல் அல்லாமல் குறைந்தபுள்ளி பெற்றவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள். ஒவ்வொரு ரேசிலும் வீரர், வீராங்கனைகள் பிடிக்கும் இடத்தை பொறுத்து புள்ளி வழங்கப்படும். அதாவது ஒரு ரேசில் முதலிடத்தை பிடிப்பவருக்கு ஒரு புள்ளியும், 2-வது இடத்தை பிடிப்பவர்களுக்கு 2 புள்ளியும் அளிக்கப்படும். இடத்தை பொறுத்து புள்ளி அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் பாய்மரப்படகு போட்டியில் ஆண்களுக்கான வின்ட்சர்பெர் ஆர்எஸ்:எக்ஸ் பிரிவு பந்தயத்தில் 14 ரேஸ்கள் முடிவில் இந்திய வீரர் எபாத் அலி (52 புள்ளி) வெண்கலப்பதக்கம் வென்றார். தென்கொரியா வீரர் சோ வோன்வோ (13 புள்ளி) தங்கப்பதக்கமும், தாய்லாந்து வீரர் நத்தாபோங் (31 புள்ளி) வெள்ளிப்பதக்கமும் தட்டிச் சென்றனர்.
டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சுமித் நாகல் 7-6 (11-9), 6-4 என்ற நேர்செட்டில் கஜகஸ்தானின் பிபித் ஹூகாவை விரட்டியடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 6-1, 6-2 என்ற நேர்செட்டில் ஹாங்காங்கின் ஆதித்யா படாலியை தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். கலப்பு இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி-அங்கிதா ரெய்னா ஜோடி 6-0, 6-0 என்ற நேர்செட்டில் பாகிஸ்தானின் சாரா-அகீக் கான் இணையை துவம்சம் செய்தது.
ஆக்கி போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் சிங்கப்பூரை சந்தித்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 16-1 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூரை ஊதித்தள்ளியது. இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். முதலாவது ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானை எளிதில் வென்று இருந்தது. இந்திய அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 4 கோலும், மன்தீப் சிங் 3 கோலும், அபிஷேக், வருண்குமார் தலா 2 கோலும், லலித்குமார் உபாத்யாய், குர்ஜந்த் சிங், விவேக் சாகர் பிரசாத், மன்பிரீத் சிங், ஷாம்ஷெர்சிங் தலா ஒரு கோலும் அடித்தனர். சிங்கப்பூர் அணி தரப்பில் ஜாகி சூல்கர்னைன் ஒரு கோல் திருப்பினார்.
ஸ்குவாஷ் போட்டியில் ஆண்கள் அணிகளுக்கான 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் சிங்கப்பூரையும், 2-வது லீக் ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் கத்தாரையும் தோற்கடித்தது.
பெண்களுக்கான அணிகளுக்கான 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை பந்தாடியது. இந்திய அணியில் தன்வி கண்ணா, ஜோஸ்னா சின்னப்பா, அனாஹத் சிங் ஆகியோர் தங்களது ஆட்டங்களில் வெற்றியை ருசித்தனர்.
வாள்வீச்சு போட்டியில் பெண்களுக்கான சாப்ரே தனிநபர் பிரிவில் தனது 4 லீக் சுற்று பந்தயம் மற்றும் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் வெற்றிகளை குவித்த இந்திய வீராங்கனையான தமிழகத்தை சேர்ந்த பவானிதேவி கால்இறுதியில் சீனாவின் யாகி ஷாவை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த போட்டியில் பவானி தேவி 7-15 என்ற புள்ளி கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.