ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: 27 பதக்கங்களுடன் 3-வது இடத்தில் இந்தியா
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா 27 பதக்கங்களை குவித்து 3-வது இடத்தை பிடித்தது.
பாங்காக், -
பாருல் சவுத்ரிக்கு 2-வது பதக்கம்
24-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கடந்த 12-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று இந்தியா மேலும் 8 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை அறுவடை செய்தது.
பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் பாருல் சவுத்ரி 15 நிமிடம் 52.35 வினாடிகளில் 2-வதாக வந்து வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தினார். ஜப்பானின் யுமா யமாமோட்டோ (15 நிமிடம் 51.16 வினாடி) தங்கப்பதக்கத்தையும், மற்றொரு இந்திய மங்கை அங்கிதா (16 நிமிடம் 03.33 வினாடி) வெண்கலப்பதக்கத்தையும் கைப்பற்றினர். 28 வயதான பாருல் சவுத்ரி இந்த பிரிவில் தேசிய சாதனையாக 15 நிமிடம் 10.35 வினாடிகளில் இலக்கை கடந்திருக்கிறார். அதே வேகத்தில் இங்கு ஓடியிருந்தால் தங்கமங்கையாக ஜொலித்து இருப்பார். நடப்பு தொடரில் அவருக்கு இது 2-வது பதக்கமாகும். ஏற்கனவே 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் தங்கம் வென்று இருந்தார்.
8 பேர் கலந்து கொண்ட ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தின் இறுதி சுற்றில் இந்தியாவின் கிஷான் குமார் 1 நிமிடம் 45.88 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். தனிப்பட்ட முறையில் அவரது சிறந்த செயல்பாடு இதுவாகும். கத்தாரின் அபுபக்கர் ஹைதர் அப்தல்லா (1 நிமிடம் 45.53 வினாடி) முதலிடம் பிடித்தார். இதன் பெண்கள் பிரிவிலும் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கமே கிட்டியது. கே.எம்.சந்தா 2 நிமிடம் 01.58 வினாடிகளில் இலக்கை 2-வதாக தொட்டார்.
பதக்கப்பட்டியலில் 3-வது இடம்
100 மீட்டர் தடை ஓட்டத்தில் மகுடம் சூடிய ஜோதி யரார்ஜி 200 மீட்டர் ஓட்டத்தில் 23.13 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. சிங்கப்பூரின் வெரோனிகா ஷாந்தி பெரீரா புதிய போட்டிச் சாதனையுடன் (22.70 வினாடி) தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு ஆண்கள் பிரிவில் வெள்ளியும், பெண்கள் பிரிவில் வெண்கலமும் கிடைத்தது. ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் குல்வீர் சிங் (வெண்கலம்), 20 கிலோமீட்டர் நடைபந்தயத்தில் விகாஷ் சிங் (வெண்கலம்), பிரியங்கா கோஸ்வாமி (வெள்ளி), குண்டு எறிதலில் அபா கதுவா (வெள்ளி), மன்பிரீத் கவுர் (வெண்கலம்), ஈட்டி எறிதலில் டி.பி.மானு (வெள்ளி)ஆகிய இந்தியர்களும் பதக்க மேடையில் ஏறினர்.
5 நாட்கள் நடந்த இந்த தடகள திருவிழாவில் இந்தியா 6 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலம் என்று மொத்தம் 27 பதக்கங்களுடன் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்தது. ஜப்பான் முதலிடத்தையும் (16 தங்கம் உள்பட 37 பதக்கம்), சீனா 2-வது இடத்தையும் (8 தங்கம் உள்பட 22 பதக்கம்) பெற்றன.