ஒரு பொண்ணை ஏற்பாடு செய்யுங்கள்...!! பஜ்ரங் பூனியா பற்றி பிரிஜ் பூஷண் பரபரப்பு குற்றச்சாட்டு
ஒரு பொண்ணை ஏற்பாடு செய்யுங்கள் என மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா கூறினார் என்று பிரிஜ் பூஷண் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு விவகாரத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 12 ஆண்டுகளாக அந்த பதவியில் உள்ள பிரிஜ் பூஷண் பா.ஜ.க. எம்.பி.யாகவும் இருந்து வருகிறார்.
இதுதவிர, கூட்டமைப்பின் நிதி தவறாக பயன்படுத்தப்படுவது மற்றும் தவறான நிர்வாகம் உள்ளிட்ட விசயங்களை வலியுறுத்தியும் 3 மாதங்களுக்கு பின் டெல்லி ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி தொடங்கி மீண்டும் நடந்து வருகிறது. போராட்டத்திற்கு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், பிரிஜ் பூஷண் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், பிரதமர் மோடி அல்லது உள்துறை மந்திரி அமித் ஷா அல்லது பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் கேட்டு கொண்டால் எம்.பி. பதவியில் இருந்து விலகுவேன் என கூறியுள்ளார். அவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் பற்றி பிரதமர் மோடியிடம் பேசவில்லை என்றும் பிரிஜ் பூஷண் கூறியுள்ளார்.
மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, என்னை சிக்க வைப்பதற்காக, ஒரு பொண்ணை ஏற்பாடு செய்யுங்கள் என கூறுவது கேட்கிறது. அந்த ஆடியோவை, குழுவிடம் வழங்கி உள்ளேன் என கூறியுள்ளார். ஆனால் எந்த குழு என தெரிவிக்கவில்லை.
என்னை தூக்கில் போடுங்கள். ஆனால், மல்யுத்த செயல்பாடுகளை நிறுத்த வேண்டாம். குழந்தைகளின் வருங்காலத்துடன் விளையாடாதீர்கள் என அவர் கூறியுள்ளார்.
அவர், செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அனைத்து வித குற்றச்சாட்டுகளையும் மறுத்து உள்ளதுடன், தனக்கு எதிராக போராடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாதிக்கப்பட்ட நபர்கள் என்றும் அரசியல் உள்நோக்கத்துடன் அவர்கள் போராடுகின்றனர் என்றும் தொடர்ச்சியாக கூறி வருகிறார்.
பதவியில் இருந்து விலகுவது பற்றி செய்தியாளர் கேட்டதும் சற்று ஆத்திரமடைந்த அவர், முன்பு 100 குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் என கூறிய அவர்கள், ஆயிரம் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் என கூற தொடங்கி உள்ளனர் என்று கூறியுள்ளார்.