புதிய நாடாளுமன்ற கட்டிடம் முன் வரும் 28-ந்தேதி மகளிர் கூட்டம்; மல்யுத்த வீராங்கனைகள் முடிவு


புதிய நாடாளுமன்ற கட்டிடம் முன் வரும் 28-ந்தேதி மகளிர் கூட்டம்; மல்யுத்த வீராங்கனைகள் முடிவு
x

புதிய நாடாளுமன்ற கட்டிடம் முன் வரும் 28-ந்தேதி அமைதியாக மகளிர் கூட்டம் ஒன்றை நடத்த மல்யுத்த வீராங்கனைகள் முடிவு செய்து உள்ளனர்.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் விவகாரத்தில் மல்யுத்த வீராங்கனைகள் மெழுகுவர்த்தி ஏந்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதன்பின்னர் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கூறும்போது, புதிய நாடாளுமன்ற கட்டிடம் முன் வரும் 28-ந்தேதி அமைதியாக மகளிர் கூட்டம் ஒன்றை நடத்த மல்யுத்த வீராங்கனைகள் முடிவு செய்து உள்ளோம். இதில், அனைத்து முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பார்கள்.

எனினும், எங்களுக்கு ஆதரவு தரும் பெண்களால் முதன்மையாக இது நடத்தப்படும் என கூறியுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் முன் நடைபெற கூடிய மகா பஞ்சாயத்து கூட்டம் அமைதியான போராட்டத்தில் ஒன்றாக இருக்கும் என தெரிவித்து உள்ளார்.

இவர்களது போராட்டத்திற்கு, சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் சங்கம் உள்பட அரியானா, பஞ்சாப், டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள விவசாய சங்க தலைவர்கள் பலர், மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்து, போராட்டம் நடைபெறும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதிக்கு வருகை தந்து, அவர்களுக்கு தங்களது ஆதரவை வழங்கி உள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு அரியானா உள்துறை மற்றும் சுகாதார மந்திரியான அனில் விஜ் தனது ஆதரவை வெளிப்படுத்தினார். அவர்கள் சார்பில், நடுநிலையாளராக செயல்பட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தனது விருப்பத்தினையும் அவர் வெளியிட்டு, அவர்களுக்கு உறுதி கூறினார். இதுதவிர, மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குர் கூறும்போது, பாரபட்சமின்றி டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என கூறினார்.

இந்நிலையில், பிரிஜ் பூஷண் சமீபத்தில் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், நார்கோ சோதனை, பாலிகிராப் சோதனை அல்லது உண்மை கண்டறியும் சோதனைக்கு நான் தயார். அதே சோதனை வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் பூனியாவுக்கும் நடத்தப்பட்டால் அதற்கு தயார் என பதிவிட்டார்.

இந்த சூழலில் பஜ்ரங் பூனியா செய்தியாளர்களிடம் பேசும்போது, நார்கோ சோதனை, பாலிகிராப் சோதனை அல்லது உண்மை கண்டறியும் சோதனைக்கு நான் தயார் என பிரிஜ் பூஷண் சரண் சிங் கூறியுள்ளார். நார்கோ சோதனை செய்ய நாங்களும் தயார் என்று முன்பே கூறி விட்டோம்.

சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையின் கீழ் இந்த உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும். அதனை நேரலையாக நாடு முழுவதும் பார்க்க வழி செய்ய வேண்டும். அப்போதுதான், இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தலைவருக்கும் மற்றும் அவருக்கு எதிராக புகார் அளித்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன என மக்களுக்கு தெரிய வரும் என கூறியுள்ளார்.

உண்மையில், அவருக்கு எதிராக புகார் அளித்த 7 வீராங்கனைகளும் கூட சோதனைக்கு தயாராக உள்ளனர். ஒட்டுமொத்த நாடும் அதனை பார்க்க வகைசெய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டிடம் வேண்டுகோளாக கேட்டு கொள்கிறோம் என கூறியுள்ளார்.

பிரிஜ் பூஷணை சமூக ஊடகத்தில் ஒரு பிரபல ஸ்டாராக ஆக்க கூடாது என்றும் ஏனெனில் அவர் குற்றம் செய்திருக்கிறார் என்றும் பூனியா கூறியுள்ளார். இதனை அவர் ஒரு டிரெண்டாக ஆக்க கூடாது என்றும் பூனியா கூறியுள்ளார். வினேஷ் போகத்தும் இதே கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார். மெழுகுவர்த்தி பேரணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என சாக்சி மாலிக் மக்களிடம் கேட்டு கொண்டார்.


Next Story