இந்திய தடகள அணியில் இடம்: தமிழகத்தை சேர்ந்த 5 பேர் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு


இந்திய தடகள அணியில் இடம்: தமிழகத்தை சேர்ந்த 5 பேர் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு
x
தினத்தந்தி 7 July 2021 5:46 AM IST (Updated: 7 July 2021 5:46 AM IST)
t-max-icont-min-icon

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக ஓட்டப்பந்தய வீரர், வீராங்கனைகள் 5 பேர் தேர்வாகியுள்ளனர்.

சென்னை,

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 26 பேர் கொண்ட இந்திய தடகள அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தனலட்சுமி, சுபா, ேரவதி, ஆரோக்ய ராஜீவ், நாகநாதன் ஆகிய 5 தமிழர்களும் இடம் பிடித்துள்ளனர். 3 வீராங்கனைகளும் 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்துக்கு தேர்வாகியுள்ளனர். வீரர்கள் இருவரும் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

2-வது முறையாக ஒலிம்பிக்கில் களம் காணும் ஆரோக்ய ராஜீவ் திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்துள்ள வழுதியூர் கிராமத்தை பூர்விகமாக கொண்டவர். ராணுவத்தில் பணியாற்றும் 30 வயதான ஆரோக்ய ராஜீவ் ஆசிய விளையாட்டில் 3 பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.

நாகநாதன், சென்னை ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக உள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சிங்கபுலியபட்டியைச் சேர்ந்தவர். இவரது தந்தை பாண்டி, தாயார் பஞ்சவர்ணம். நாகநாதனுக்கு ஒலிம்பிக் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளதால், அவரது சொந்த ஊர் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறது. அவருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், ஆயுதப்படை துணை கமிஷனர் சவுந்திரராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் செல்போனில் பேசி வாழ்த்து தெரிவித்தனர்.

தனலட்சுமி-சுபா

சமீபத்தில் நடந்த தேசிய சீனியர் தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்று அசத்திய திருச்சியைச் சேர்ந்த எஸ்.தனலட்சுமிக்கு, காயத்தால் பூவம்மா விலகியதால் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

ரேவதி, தெற்கு ரெயில்வேயின் மதுரை கோட்டத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றுகிறார். அவருக்கு தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சுபா, திருச்சி அருகே உள்ள திருவெம்பூரைச் சேர்ந்தவர். 21 வயதான சுபா சென்னையில் பயிற்சி எடுத்து தனது திறமையை மேம்படுத்தி இன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவரது தந்தை வெங்கடேசன் கட்டிடத் தொழிலாளி.

ஏழ்மையான குடும்ப பின்னணி, போதிய பயிற்சி வசதியின்மை உள்ளிட்ட பல்வேறு தடைகளை தாண்டி ஒலிம்பிக்கில் கால்பதிக்க உள்ள இவர்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ‘ஒலிம்பிக் போட்டிக்கு ஒரே நேரத்தில் தடகளத்தில் இருந்து தமிழகத்தை சேர்ந்த 5 பேர் தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்’ என்று தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா நேற்று தெரிவித்தார்.

Next Story