ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி தொடங்குகிறது
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி தொடங்க உள்ளது.
* 19 வயதுக்கு உட்பட்ட டெல்லி கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து ஆடிய பிரின்ஸ் ராம் நிவாஸ் யாதவ் தனது வயதை குறைத்து காட்டி விளையாடியது தெரியவந்ததை தொடர்ந்து அவருக்கு அடுத்த 2 சீசனில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.
* சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் லிங்கராஜ் நினைவு அணி 5-1 என்ற கோல் கணக்கில் இக்பால் மனமகிழ் மன்ற அணியை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய அணி 3-1 என்ற கோல் கணக்கில் யாசின் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை தோற்கடித்தது.
* மும்பையில் நடந்த சாலை பாதுகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜமைக்காவை சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரர் யோஹன் பிளேக் அளித்த பேட்டியில், ‘அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி தான் தனது கடைசி ஒலிம்பிக் போட்டியாகும். இதில் தங்கப்பதக்கம் வெல்வதே எனது நோக்கமாகும். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நான் தங்கம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. இந்த போட்டிக்காக ஆவலுடன் தயாராகி வருகிறேன்’ என்று தெரிவித்தார். 2012-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் யோஹன் பிளேக் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார்.
* ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி தொடங்குகிறது. இதில் கர்நாடகம், இமாச்சலபிரதேச அணிகளுக்கு எதிரான முதல் 2 ஆட்டங்களுக்கான தமிழக கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியின் கேப்டனாக விஜய் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அணி வருமாறு:- விஜய் சங்கர் (கேப்டன்), பாபா அபராஜித் (துணை கேப்டன்), எம்.விஜய், அபினவ் முகுந்த், தினேஷ் கார்த்திக், ஜெகதீசன், ஆர்.அஸ்வின், சாய் கிஷோர், நடராஜன், விக்னேஷ், அபிஷேக் தன்வார், எம்.அஸ்வின், சித்தார்த், ஷாருக்கான், கே.முகுந்த். 2-வது போட்டியில் வாஷிங்டன் சுந்தர் தமிழக அணியுடன் இணைவார் என்றும் கே.முகுந்த் விடுவிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* சமீபத்தில் புதிதாக அமைக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்ட கைப்பந்து சங்க புதிய நிர்வாகிகள் (2019-2023-ம் ஆண்டுக்கான) தேர்வு தமிழ்நாடு கைப்பந்து சங்க சேர்மன் ஏ.கே.சித்திரைபாண்டியன் முன்னிலையில் திருப்பத்தூர் அரசு கலைக்கல்லூரியில் நடந்தது. இதில் சேர்மனாக கே.வி. லட்சுமிபதியும், தலைவராக சீனிவாசனும், செயலாளராக ஏ.அன்பரசனும், பொருளாளராக தயாநிதியும் மற்றும் நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.
* தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் நடந்து வருகிறது. இதில் தடகள போட்டி இன்று தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய தடகள அணியில் தமிழகத்தை சேர்ந்த சி.கனிமொழி (100 மீட்டர் தடை ஓட்டம்), சாமிநாதன் (நீளம் தாண்டுதல்) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இருவரும் சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.
* 2020-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் 19-ந் தேதி நடக்கிறது. 73 வீரர்கள் தேர்வு செய்யப்படுவதற்காக நடக்க இருக்கும் இந்த ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 971 வீரர்கள் (713 இந்தியர்கள், 258 வெளிநாட்டினர்) தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story