இளையோர் ஒலிம்பிக்: தமிழக தடகள வீரர் பிரவீனுக்கு வெண்கலம் - ‘விவசாய தொழிலாளியின் மகன் சாதனை’


இளையோர் ஒலிம்பிக்: தமிழக தடகள வீரர் பிரவீனுக்கு வெண்கலம் - ‘விவசாய தொழிலாளியின் மகன் சாதனை’
x
தினத்தந்தி 18 Oct 2018 5:00 AM IST (Updated: 18 Oct 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

இளையோர் ஒலிம்பிக்கில் தமிழக தடகள வீரர் பிரவீன் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

பியூனஸ் அயர்ஸ்,

3-வது இளையோர் ஒலிம்பிக் (யூத்) போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்களுக்கான டிரிபிள் ஜம்பில் (மும்முறை நீளம் தாண்டுதல்) கியூபா வீரர் அலெக்ஜான்ட்ரோ டியாஸ் (34.18 மீட்டர்) தங்கப்பதக்கமும், நைஜீரியாவின் எம்மானுல் ஒரிட்ஸ்மீவா (31.85 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினர்.

தமிழகத்தை சேர்ந்த பிரவீன் வெண்கலப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இந்த போட்டி புதிய விதிமுறைப்படி இரண்டு பகுதியாக நடத்தப்பட்டது. இதன்படி முதல் பகுதியில் அதிகபட்சமாக 15.84 மீட்டர் தூரமும், 2-வது பகுதியில் அதிகபட்சமாக 15.68 மீட்டர் தூரமும் தாண்டினார். ஆக மொத்தம் 31.52 மீட்டர் நீளம் தாண்டிய பிரவீன் 3-வது இடத்தை பிடித்து பதக்கத்தை சொந்தமாக்கினார். அவர் சர்வதேச அளவில் வென்ற முதல் பதக்கம் இதுவாகும். ஏற்கனவே பள்ளிகளுக்கு இடையே நடந்த கேலோ விளையாட்டில் தங்கம் வென்று இருந்தார்.

17 வயதான பிரவீன் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அம்மாப்பேட்டை என்ற ஊரைச் சேர்ந்தவர். அவரது தந்தை சித்திரைவேல் விவசாய கூலித்தொழிலாளி. பிரவீனின் சாதனை குறித்து அவருக்கு பயிற்சி அளித்து வரும் இந்திரா சுரேஷ் கூறியதாவது:-

பிரவீன் சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு சிறப்பு விடுதியில் தங்கியிருந்து 7-ம் வகுப்பு படித்த போது, அவரது திறமையை கண்டு வியந்தேன். அதைத் தொடர்ந்து அவர் மீது தனிகவனம் செலுத்தி பயிற்சி கொடுத்தேன். அந்த சமயம் நான் எஸ்.டி.ஏ.டி.யில் (சென்னை) தடகள பயிற்சியாளராக பணியாற்றி கொண்டிருந்தேன். பிறகு நான் நாகர்கோவிலுக்கு இடம் மாறிய போது, பிரவீனும் அங்கு வந்து உங்களிடம் தான் பயிற்சி பெறுவேன் என்று கூறினார். அதனால் அவருக்கு தொடர்ந்து பயிற்சி கொடுக்க முடிவு செய்தேன். பிரவீன் மட்டுமல்ல, அவரது இளைய சகோதரரும் என்னிடம் தான் பயிற்சி எடுத்து வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர், பிரவீன். அவரது தந்தை விவசாய தினக்கூலி. தந்தையின் வருமானம் பிரவீனின் தடகள பயிற்சிக்கு போதுமானதாக இல்லை. போட்டிகளில் பங்கேற்க ஒரு சிலர் அவருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

பிரவீனிடம் அபாரமான திறமை இருக்கிறது. கடினமாக உழைக்கக்கூடியவர். எப்போதாவது தான் சொந்த ஊருக்கு செல்வார். மற்றபடி அவரது தந்தை தான் இங்கு வந்து பார்த்து செல்வார். அவரை சீனியர் போட்டியில் தேசிய அளவிலான சாம்பியனாக உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதன் பிறகு இந்தியாவுக்காக ஆசிய விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்க செய்ய வேண்டும்.

பிரவீன் தற்போது கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள கல்லூரியில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார். தேர்வு எழுதுவதற்காக மட்டுமே அங்கு செல்வார். அதற்குரிய அனுமதியை அந்த கல்லூரி நிர்வாகம் வழங்கி இருகிறது. மற்ற நேரங்களில் அவர் நாகர்கோவிலில் தங்கியிருந்து பயிற்சியில் ஈடுபடுவார்.

இவ்வாறு இந்திரா கூறினார்.


Next Story