ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 2 தங்கம்; பதக்க பட்டியலில் முதல் இடம்
ஜெர்மனியில் நடைபெறும் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு இன்று 2 தங்க பதக்கங்கள் கிடைத்தன.
புதுடெல்லி,
ஜெர்மனியின் சூல் நகரில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு சம்மேளனத்தின் சார்பில் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது.
இதில், ஆடவருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அமன்பிரீத் சிங் தங்க பதக்கம் தட்டி சென்றார். அவர் மொத்தம் 586 புள்ளிகளை கைப்பற்றினார்.
இதேபோன்று மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் குழு போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனைகளான மேகனா சதுலா, பாயல் கத்ரி மற்றும் சிம்ரன்பிரீத் கவுர் பிரார் ஆகியோர் இந்தியாவுக்கான தங்க பதக்கங்களை வென்று உள்ளனர். அவர்கள் கூட்டாக 1,719 புள்ளிகளை கைப்பற்றி உள்ளனர்.
இதனால், பதக்க பட்டியலில் இந்தியா 5 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை வென்று முதல் இடம் பிடித்து உள்ளது.
தொடர்ந்து, 4 தங்கம், 3 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களுடன் கொரியா 2-வது இடத்தில் உள்ளது.
3 தங்கம் மற்றும் 3 வெள்ளி என மொத்தம் 6 பதக்கங்களுடன் அமெரிக்கா பதக்க பட்டியலில் 3-வது இடம் பிடித்து உள்ளது. துப்பாக்கி சுடுதல் போட்டி வருகிற ஜூன் 9-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.