உலகக் கோப்பை ஆக்கி: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்


உலகக் கோப்பை ஆக்கி: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 15 Jan 2023 4:48 AM IST (Updated: 15 Jan 2023 5:57 AM IST)
t-max-icont-min-icon

உலகக் கோப்பை ஆக்கியில் 2-வது வெற்றியை குறி வைத்து இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

ரூர்கேலா,

உலகக் கோப்பை ஆக்கி

15-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. 'ஏ ' பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா, 'பி' பிரிவில் பெல்ஜியம், ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான், 'சி' பிரிவில் நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, சிலி, 'டி' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் நான்கு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும். 2-வது மற்றும் 3-வது இடத்தை பெறும் அணிகள் 2-வது சுற்றில் மோதி அதில் இருந்து மேலும் 4 அணிகள் கால்இறுதிக்கு தேர்வாகும்.

உலகத் தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஸ்பெயினை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த நிலையில் இந்தியா தனது 2-வது லீக்கில் இன்று 5-ம் நிலை அணியான டேவிட் அமீஸ் தலைமையிலான இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் உலகின் மிகப்பெரிய ஆக்கி ஸ்டேடியமான 21 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா ஸ்டேடியத்தில் அரங்கேறுகிறது. இங்கிலாந்து தனது முதல் ஆட்டத்தில் வேல்சை 5-0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது.

பயிற்சியாளர் கருத்து

ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் தற்காப்பு யுக்தி பிரமாதமாக இருந்தது. இதனால் தான் எதிரணியால் கடைசி வரை கோல் போட முடியவில்லை. ஆனால் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக்குவதில் தான் இந்தியாவின் பலவீனம் தெரிந்தது. அந்த வகையில் 5 வாய்ப்புகளை வீணடித்தனர். இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமாகும். மற்றபடி முதல் ஆட்டத்தை போன்றே இதிலும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் இந்தியா காத்திருக்கிறது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் கூறுகையில், 'இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் மிகவும் கடினமாக இருக்கும். அவர்கள் எங்களை விட தரவரிசையில் முன்னணியில் இருக்கிறார்கள். காமன்வெல்த் விளையாட்டில் எந்த அளவுக்கு சவால் கொடுத்தார்கள் என்பதை அறிவோம். ஸ்பெயினுடன் ஆடிய போது எங்களது தற்காப்பு ஆட்டம் உண்மையிலேயே சிறப்பாக இருந்தது. அதை தொடர வேண்டும்' என்றார்.

இதுவரை...

இவ்விரு அணிகள் இதுவரை 21 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 10-இந்தியாவும், 7-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. 4 போட்டி 'டிரா'வில் முடிந்தது. கடைசியாக கடந்த ஆகஸ்டில் காமன்வெல்த் விளையாட்டில் சந்தித்த போது, 4-4 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.

இன்றைய மோதலில் வெற்றி காணும் அணி ஏறக்குறைய கால்இறுதியை எட்டி விடும் என்பதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இதே பிரிவில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின்-வேல்ஸ் (மாலை 5 மணி) அணிகள் மோதுகின்றன.

நடப்பு சாம்பியன் அபாரம்

முன்னதாக நேற்று நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) நடப்பு சாம்பியன் பெல்ஜியம் 5-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை துவம்சம் ெசய்து போட்டியை வெற்றியோடு தொடங்கியது. ஜெர்மனி அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஆசிய விளை யாட்டு சாம்பியனான ஜப்பானை பதம்பார்த்தது.

'சி' பிரிவில் நியூசிலாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் சிலியையும், முன்னாள் சாம்பியன் நெதர்லாந்து 4-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவையும் வீழ்த்தியது.


Next Story