பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி


பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி
x

பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி 11 கோல் போட்டு அரைஇறுதிக்கு முன்னேறியது.

ககாமிகஹரா,

8-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஜப்பானின் ககாமிகஹராவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. 'ஏ' பிரிவில் அங்கம் வகித்த இந்திய அணி முதல் இரு ஆட்டங்களில் உஸ்பெகிஸ்தான், மலேசியாவை தோற்கடித்தது. தென்கொரியாவுடன் 'டிரா' கண்டது.

இந்த நிலையில் இந்தியா நேற்று தனது கடைசி லீக்கில் குட்டி அணியான சீனதைபேயை சந்தித்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நமது வீராங்கனைகள் முதல் நிமிடத்தில் இருந்து 57-வது நிமிடம் வரை கோல் மழை பொழிந்தனர். எதிரணியால் ஒரு கோல் கூட திருப்ப இயலவில்லை.

முடிவில் இந்தியா 11-0 என்ற கோல் கணக்கில் சீனதைபேயை வீழ்த்தி 3-வது வெற்றியை சுவைத்தது. இந்திய அணியில் 9 வீராங்கனைகள் கோல் பட்டியலில் இணைந்தனர். அதிகபட்சமாக அன்னு, சுனேலிதா தலா 2 கோல் போட்டனர். மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் தென்கொரியா 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. லீக் சுற்று முடிவில் இந்தியா, தென்கொரியா அணிகள் தலா 3 வெற்றி, ஒரு டிரா என்று 10 புள்ளிகளுடன் டாப்-2 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. என்றாலும் கோல் வித்தியாசத்தில் இந்தியா புள்ளிபட்டியலில் முதலிடத்தை பெற்றது.

'பி' பிரிவில் நடந்த கடைசி சுற்று லீக் ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் சீனா 11-0 என்ற கோல் கணக்கில் ஹாங்காங்கையும், ஜப்பான் 8-0 என்ற கோல் கணக்கில் கஜகஸ்தானையும் துவம்சம் செய்தன. இந்த பிரிவில் சீனா (4 வெற்றியுடன் 12 புள்ளி), ஜப்பான் (3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 9 புள்ளி) அணிகள் அரைஇறுதியை உறுதி செய்தன.

நாளை நடக்கும் அரைஇறுதி ஆட்டத்தில் பிரீத்தி தலைமையிலான இந்திய அணி ஜப்பானுடன் மோதுகிறது. மற்றொரு அரைஇறுதியில் தென்கொரியா- சீனா அணிகள் சந்திக்கின்றன.


Next Story