ஆசிய கோப்பை ஆக்கி போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் பலப்பரீட்சை
இந்தோனேஷியாவில் இன்று தொடங்கும் ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஜகர்தா,
11-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி இந்தோனேஷிய தலைநகர் ஜகர்தாவில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. வருகிற 1-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், இந்தோனேஷியா, 'பி' பிரிவில் மலேசியா, 4 முறை சாம்பியனான தென்கொரியா, ஓமன், வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெறும்.
2-வது சுற்றுக்கு வரும் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும். இந்த தொடரில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் புவனேஸ்வரில் நடக்கும் உலக கோப்பை ஆக்கி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். அந்த வகையில் இந்த போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால் உலக கோப்பை போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இந்தியா ஏற்கனவே தகுதி பெற்று விட்டது நினைவு கூரத்தக்கது.
இந்தியா-பாகிஸ்தான்
முதல் நாளான இன்று 4 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் தொடக்க ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான இந்தியா, பரம போட்டியாளரான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. டோக்கியோ ஒலிம்பிக்குடன் ஆக்கியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டு பிறகு தனது முடிவை மாற்றிக்கொண்டு அணிக்கு திருப்பிய பிரேந்திர லக்ரா இந்திய அணியை வழிநடத்த உள்ளார். அடுத்து வரும் பெரிய போட்டிகளுக்கு தயார்படுத்தும் வகையில் இந்திய அணியில் அதிகமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மாரீஸ்வரன் சக்திவேல், எஸ்.கார்த்தி ஆகியோரும் இதில் அடங்குவர்.
போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் பிரேந்திர லக்ரா, துணை கேப்டன் எஸ்.வி. சுனில் கூறுகையில், 'பாகிஸ்தானுடன் எந்த ஆட்டத்தில் மோதினாலும் நெருக்கடி எப்போதும் இருக்கத்தான் செய்யும். சீனியர் என்ற முறையில் நாங்கள் மிகவும் பரவசமடைந்தால், இளம் வீரர்கள் நெருக்கடிக்குள்ளாவார்கள். எனவே இதை ஒரு சாதாரணமான ஆட்டமாக நாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இது எளிதான தொடர் அல்ல. ஆனால் வகுத்துள்ள திட்டப்படி விளையாடினால் வெற்றி பெற முடியும். இளம் வீரர்களை ஊக்கப்படுத்தி, அவர்களை வழிநடத்த வேண்டியது தான் எங்களது மிகப்பெரிய பொறுப்பு' என்றனர்.
நெருக்கடியை சமாளிப்பது...
பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியாக மோதிய 13 ஆட்டங்களில் 12-ல் இந்தியா வெற்றி பெற்றிருப்பதால் நமது வீரர்கள் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். 3 முறை சாம்பியனான பாகிஸ்தான் அணியிலும் நிறைய இளம் வீரர்களை அங்கம் வகிப்பதால் களத்தில் அவர்கள் எப்படி நெருக்கடியை திறம்பட சமாளிக்கப்போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 மற்றும் செலக்ட்2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இன்றைய நாளில் நடக்கும் மற்ற ஆட்டங்களில் மலேசியா-ஓமன், தென்கொரியா- வங்காளதேசம், ஜப்பான்- இந்தோனேசியா அணிகள் சந்திக்கின்றன.