ஜோஹார் கோப்பை வெற்றி, உலகக் கோப்பை ஆக்கி தொடருக்கு தயாராவதற்கான நம்பிக்கையை அளிக்கும்- கேப்டன் உத்தம் சிங்


ஜோஹார் கோப்பை வெற்றி, உலகக் கோப்பை ஆக்கி தொடருக்கு தயாராவதற்கான நம்பிக்கையை அளிக்கும்- கேப்டன் உத்தம் சிங்
x

Image Courtesy: Hockey India

ஜோஹார் கோப்பைக்கான சர்வதேச ஜூனியர் ஆக்கி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

புவனேஸ்வர்,

6 அணிகள் பங்கேற்ற 10-வது ஜோஹார் கோப்பைக்கான சர்வதேச ஜூனியர் ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் நடந்து முடிந்துள்ளது. இதில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மல்லுக்கட்டின.

பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிய வெற்றியை நிர்ணயிக்க 'பெனால்டி ஷூட் அவுட்' முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 5-4 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

சாம்பியன் பட்டம் வென்றது குறித்து பேசிய இந்திய ஜூனியர் ஆக்கி அணியின் கேப்டன் உத்தம் சிங், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி தொடருக்கு தயாராவதற்கு, இந்த வெற்றி நம்பிக்கையை அளிக்கும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் பேசியதாவது:-

இந்த தொடரின் கடந்த சீசனில் நான் இந்திய அணியில் இடம்பெற்று இருந்தேன். அப்போது நாங்கள் வெற்றி பெறுவதற்கு மிக அருகில் வந்தோம். ஆனால் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தோம். இருப்பினும், இந்த முறை, ஒரு அனுபவம் வாய்ந்த அணியாக தொடருக்குள் வந்தோம். கடந்த சில மாதங்களில் மிகவும் கடினமாக உழைத்தோம். எனவே இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

அடுத்ததாக நடைபெறவுள்ள ஜூனியர் உலகக் கோப்பைக்கு முன்னதாக எங்கள் ஆட்டத்தை மேலும் மேம்படுத்துவற்கு இது நிச்சயமாக எங்களுக்கு நம்பிக்கை அளிக்கும்.

2014ஆம் ஆண்டு சுல்தான் ஆப் ஜோஹார் கோப்பையை வென்ற இந்திய அணி, 2016ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பையையும் வென்றது. இது எங்களுக்கு பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது.

இவ்வாறு உத்தம் சிங் தெரிவித்தார்.


Next Story