நேசன்ஸ் கோப்பை ஆக்கி: சிலியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்திய மகளிர் அணி


நேசன்ஸ் கோப்பை ஆக்கி:  சிலியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்திய மகளிர் அணி
x

ஸ்பெயினில் நடந்து வரும் நேசன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் சிலியை 3-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.



வாலன்சியா,


ஸ்பெயின் நாட்டின் வாலன்சியா நகரில் 2022-ம் ஆண்டுக்கான மகளிர் நேசன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதில், உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் இந்தியா மற்றும் 14-வது இடத்தில் இருக்கும் சிலி அணிகள் விளையாடின.

போட்டியின் தொடக்கத்திலேயே இந்திய அணி அதிரடியாக ஆடியது. இந்திய அணியின் வீராங்கனை சங்கீதா குமாரி 2-வது நிமிடத்திலும், சோனிகா 10-வது நிமிடத்திலும் கோல் அடித்து அணி முன்னிலை பெற வழிவகுத்தனர்.

இதனையடுத்து, கோல் அடிப்பதற்கு சிலி அணி போராடியது. ஆனால், அதற்கான சரியான சந்தர்ப்பங்களை அந்த அணி பயன்படுத்தி கொள்ளவில்லை. போட்டியின் முதல் பாதியில், பெனால்டி கார்னர் வாய்ப்புகளை இரு அணிகளும் வீணடித்தன.

இதனால், போட்டியில் 2-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலையில் இருந்தது. இதன்பின்னர், போட்டியின் 31-வது நிமிடத்தில் இந்திய அணியின் நவ்னீத் கவுர் அடித்த கோலால் இந்தியா 3-0 என தொடர்ந்து முன்னிலையில் நீடித்தது.

இதன்பின்பு, சிலி அணியின் வில்லாகிரான் ஒரு கோல் அடித்தபோது, 3-1 என நிலைமை இருந்தது. போட்டி முடிவில் இந்திய மகளிர் அணி 3-1 என்ற புள்ளி கணக்கில் சிலியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.


Next Story