சர்வதேச ஆக்கி கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து நரிந்தர் பத்ரா ராஜினாமா


சர்வதேச ஆக்கி கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து நரிந்தர் பத்ரா ராஜினாமா
x

Image Courtesy : AFP 

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினர் பதவியில் இருந்தும் நரிந்தர் ராஜினாமா செய்துள்ளார்.

புதுடெல்லி,

சர்வதேச ஆக்கி கூட்டமைப்பின் தலைவர் பதவியை நரிந்தர் பத்ரா இன்று ராஜினாமா செய்துள்ளார். அதுமட்டுமின்றி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (IOC) உறுப்பினர் பதவியில் இருந்தும் அவர் ராஜினாமா செய்துள்ளார்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ.) தலைவராக நரிந்தர் பத்ரா 2017-ம் ஆண்டு முதல் இருந்து வந்தார். ஆக்கி இந்தியா அமைப்பின் ஆயுட்கால உறுப்பினர் என்ற அடிப்படையில் அதன் பிரதிநிதியாக ஐ.ஓ.ஏ. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதற்கிடையே அவர் ஐ.ஓ.ஏ. தலைவராக நீடிப்பதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, 'ஆக்கி இந்தியா அமைப்பில் நரிந்தர் பத்ரா ஆயுட்கால உறுப்பினராக நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது. தேசிய விளையாட்டு விதிமுறைக்குட்பட்டு அது இருக்கவில்லை' என்று கடந்த மே மாதம் உத்தரவிட்டது. கோர்ட்டு உத்தரவு எதிரொலியாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவியில் இருந்து நரிந்தர் பத்ரா நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது அவர் சர்வதேச ஆக்கி கூட்டமைப்பின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக எஃப்ஐஎச் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக பத்ரா தெரிவித்துள்ளார்.


Next Story