புதிய பணியை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன் - இந்திய மகளிர் ஆக்கி அணியின் கேப்டன்
இந்திய மகளிர் ஆக்கி அணியின் புதிய கேப்டனாக சலிமா டெடெ நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
9 அணிகள் பங்கேற்றுள்ள மகளிருக்கான புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது. இதன் அடுத்த சுற்று ஆட்டம் பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. பெல்ஜியத்தில் வருகிற 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் இந்திய அணி, அர்ஜென்டினா, பெல்ஜியத்துடன் தலா 2 முறை மோதுகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் இந்தியா-அர்ஜென்டினா அணிகள் 22-ந் தேதி சந்திக்கின்றன.
இங்கிலாந்தில் ஜூன் 1-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் இந்திய அணி, ஜெர்மனி, இங்கிலாந்துடன் தலா 2 முறை மோதுகிறது. இந்த போட்டிக்கான இந்திய மகளிர் ஆக்கி அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. கேப்டனாக இருந்த மூத்த கோல் கீப்பர் சவிதா புனியா அதிரடியாக நீக்கப்பட்டு புதிய கேப்டனாக சலிமா டெடெ நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட சலிமா டெடெ கூறுகையில் 'கேப்டனாக நியமிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது மிகப்பெரிய பொறுப்பாகும். புதிய பணியை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். எங்கள் அணி வலுவானதாகும். அனுபவம் மற்றும் இளம் வீராங்கனைகள் சரியான கலவையில் இடம் பெற்றுள்ளனர். புரோ லீக் தொடரில் பெல்ஜியம், இங்கிலாந்து சுற்றுகளில் வலுவாக முன்னேற விரும்புகிறோம். நாங்கள் முன்னேற்றம் காண வேண்டிய பகுதிகளில் கவனம் செலுத்தி இருக்கிறோம்' என்று கூறினார்.