உலகக் கோப்பை ஆக்கி: வேல்ஸ் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி


உலகக் கோப்பை ஆக்கி: வேல்ஸ் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி
x

உலகக் கோப்பை ஆக்கி போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றுள்ளது.

ரூர்கேலா,

16 அணிகள் இடையிலான 15-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசாவில் நடந்து வருகிறது. இதில் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஸ்பெயினை தோற்கடித்தது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தை கோல் இன்றி டிரா செய்தது.

இந்த நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் வேல்சை இன்று எதிர்கொண்டது. அதில் வேல்ஸ் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் முதல் சுற்றுப் போட்டியில் வீழ்த்தியுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் ஆகாஷ் தீப் இரண்டு கோல்களை பதிவு செய்து அசத்தினார்.

முன்னதாக ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக முயற்சித்தன. அதில் இந்திய அணி 21-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்து ஆட்டத்தில் முன்னிலை பெற்றது. அடுத்ததாக 32-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலை இந்திய அணி பதிவு செய்தது. இதற்கு பதிலடியாக 42 மற்றும் 44-வது நிமிடத்தில் வேல்ஸ் அடுத்தடுத்து கோல்களை பதிவு செய்தது.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் கடைசி 15 நிமிடங்களில் 45 மற்றும் 59-வது நிமிடத்தில் இந்திய அணி கோல் பதிவு செய்து 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி குரூப்-டி பிரிவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. கோல்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது. இந்திய அணி கிராஸ் ஓவர் சுற்றில் நியூசிலாந்து அணிக்கு எதிராக வரும் 22ஆம் தேதி விளையாட உள்ளது.


Next Story