ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை


ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை
x
தினத்தந்தி 9 Aug 2023 5:49 AM IST (Updated: 9 Aug 2023 12:59 PM IST)
t-max-icont-min-icon

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சென்னை,

சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதியை எட்டும்.

நேற்று முன்தினம் வரை ஒவ்வொரு அணியும் தலா 4 ஆட்டங்களில் விளையாடி விட்டன. இந்தியா (10 புள்ளி), மலேசியா (9 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்டன. சீனா (1 புள்ளி) அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. நடப்பு சாம்பியன் தென்கொரியா (5 புள்ளி), பாகிஸ்தான் (5 புள்ளி), ஜப்பான் (2 புள்ளி) ஆகிய 3 அணிகள் எஞ்சிய 2 இடத்துக்கான ரேசில் உள்ளன.

இந்தியா-பாகிஸ்தான் பலப்பரீட்சை

ஒருநாள் ஓய்வுக்கு பிறகு இன்று (புதன்கிழமை) லீக் சுற்றின் கடைசி கட்ட ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இரவு 8.30 மணிக்கு அரங்கேறும் இறுதி லீக்கில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி இந்த போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக வீறுநடை போடுகிறது. தொடக்க ஆட்டத்தில் 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை பந்தாடிய இந்தியா அடுத்த ஆட்டத்தில் ஜப்பானுடன் டிரா (1-1) செய்தது. அதன் பிறகு 5-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவையும், 3-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவையும் அடுத்தடுத்து வீழ்த்தி பிரமாதப்படுத்தியது.

பாகிஸ்தான் அணியை பொறுத்தமட்டில் சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி முதலாவது ஆட்டத்தில் 1-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம் உதை வாங்கியது. தென்கொரியா (1-1) மற்றும் ஜப்பானுடன் (3-3) டிரா கண்டது. முந்தைய ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் சீனாவை தோற்கடித்து முதல் வெற்றியை ருசித்தது.

இந்திய அணி ஏற்கனவே அரைஇறுதிக்குள் நுழைந்து விட்டாலும், பாகிஸ்தானுக்கு எதிரான மோதல் என்பதால் உணர்வுபூர்வமான எதிர்பார்ப்பும், மிகுந்த பரபரப்பும் ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்களிடமும் இயல்பாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் நெருக்கடியை நேர்த்தியாக கையாள்வதை பொறுத்தே வெற்றிக்கனி கிட்டும். பரம எதிரியான பாகிஸ்தானை துவம்சம் செய்ய இந்திய அணியினர் முன்பை விட களத்தில் இன்னும் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அத்துடன் உள்ளூர் ரசிகர்களின் அமோக ஆதரவு நமது அணிக்கு கூடுதல் வலுசேர்க்கும்.

வாழ்வா-சாவா போராட்டம்

இந்தியாவுக்கு நிகராக 3 முறை ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்று இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு இந்த ஆட்டம் வாழ்வா-சாவா போராட்டமாகும். இதில் வெற்றி பெற்றால் உமர் பூட்டா தலைமையிலான பாகிஸ்தான் அணி சிக்கலின்றி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். குறைந்தபட்சம் 'டிரா'வாவது செய்தாக வேண்டும். மாறாக பாகிஸ்தான் தோல்வியை தழுவினால் ஏறக்குறைய வெளியேற வேண்டியது தான்.

முக்கியமான இந்த ஆட்டத்தில் இந்தியாவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டி அரைஇறுதியை எட்டுவதற்கு பாகிஸ்தான் தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும் முனைப்புடன் காத்திருக்கிறது. மொத்தத்தில் வலுவான இவ்விரு அணியினரும் முதல் வினாடியில் இருந்தே 'யுத்தம்' போல் வரிந்து கட்டுவார்கள் என்பதால் களத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

சர்தேச ஆக்கி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இதுவரை 178 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்தியா 64 ஆட்டங்களிலும், பாகிஸ்தான் 82 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 32 ஆட்டங்கள் 'டிரா'வில் முடிந்தன. ஆனால் சமீப காலமாக இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியாக மோதிய 10 ஆட்டங்களில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது கிடையாது. அதில் 8-ல் வெற்றி கண்டு இருக்கிறது. 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. 2022-ம் ஆண்டு ஆசிய கோப்பையில் இரு அணிகளும் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது நினைவுகூரத்தக்கது.

ஹர்மன்பிரீத் கருத்து

இந்த போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் நிருபர்களிடம் கூறுகையில் 'பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் நிச்சயமாக தீவிரம் நிறைந்ததாக இருக்கும். எனவே நாங்கள் சாதுர்யமாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும். அத்துடன் எங்களது வழக்கமான ஆட்ட யுக்தி மற்றும் பொறுப்பில் கவனம் செலுத்த வேண்டும். எங்களது ஆட்ட பாணியை கடைபிடித்து சிறப்பாக முடிக்க முயற்சிப்போம். இந்த போட்டியின் போது ரசிகர்கள் கூட்டத்தால் ஸ்டேடியம் நிரம்பி வழியும். இது இந்திய ஆக்கிக்கு நல்ல அறிகுறியாகும். நாங்கள் பீல்டு மற்றும் பெனால்டி கார்னர் என இரு வகையிலும் கோல் அடித்து வருகிறோம். அத்துடன் பந்தை அதிக நேரம் எங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதிலும் நன்றாக செயல்படுகிறோம்.

ஆனால் தடுப்பு ஆட்டத்தில் இன்னும் நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும். குறிப்பாக கோல் எல்லைக்குள் தடுப்பு ஆட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும். எளிதில் பெனால்டி கார்னர் வாய்ப்பை எதிரணிக்கு வழங்கக்கூடாது. எதிரணிகள் தடுப்பு ஆட்டத்தில் நன்றாக இருப்பதால் பெனால்டி கார்னர் வாய்ப்பை அதிக அளவில் கோலாக மாற்ற முடியவில்லை.' என்றார்.

மலேசியா-தென்கொரியா மோதல்

முன்னதாக மாலை 4 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சீனா-ஜப்பான் அணிகள் சந்திக்கின்றன. சீனா ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்டது. ஜப்பான் அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். ஆனால் பாகிஸ்தான் அணியின் கடைசி லீக் ஆட்டத்தின் முடிவை பொறுத்தே அந்த அணிக்கு அரைஇறுதி கதவு திறக்குமா, மூடுமா என்பது தெளிவாகும்.

மாலை 6.15 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் மலேசியா-தென்கொரியா அணிகள் மோதுகின்றன. மலேசியா அணி அரைஇறுதிக்கு முன்னேறி விட்டது. தென்கொரியா அணி டிரா செய்தாலே அரைஇறுதியை உறுதி செய்து விடலாம்.

இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story