16 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசாவில் இன்று தொடக்கம்


16 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசாவில் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 13 Jan 2023 3:56 AM IST (Updated: 13 Jan 2023 11:18 AM IST)
t-max-icont-min-icon

உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசாவில் இன்று தொடங்குகிறது. முதல் நாளில் நடக்கும் ஆட்டங்களில் ஒன்றில் இந்தியா- ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

ரூர்கேலா,

ஆக்கி விளையாட்டில் உலகக் கோப்பைபோட்டி 1971-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்பெயினில் நடந்த முதல் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் கோப்பையை வென்றது. தொடக்கத்தில் 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்ட இந்த போட்டி 1978-ம் ஆண்டில் இருந்து 4 ஆண்டுக்கு ஒரு முறையாக மாற்றப்பட்டது.

இதன்படி 15-வது உலகக் கோப்பை ஆக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 29-ந்தேதி வரை நடக்கிறது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியும் இந்தியாவில் தான் நடத்தப்பட்டது. இதன் மூலம் தொடர்ச்சியாக இரு உலக கோப்பை போட்டிகளை நடத்தும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது.

போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா, 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான், 'சி' பிரிவில் நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, சிலி, 'டி' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு முன்னேறும். 2 மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றில் மோதி அதில் இருந்து மேலும் 4 அணிகள் கால்இறுதிக்கு தேர்வாகும்.


உலகக் கோப்பை வரலாற்றை புரட்டிப்பார்த்தால் அதிகபட்சமாக பாகிஸ்தான் அணி 4 முறை வாகை சூடியுள்ளது. ஆனால் அந்த அணி இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக நெதர்லாந்து, ஆஸ்திரேலிய அணிகள் தலா 3 முறை கோப்பைக்கு முத்தமிட்டுள்ளன.

நடப்பு தொடரில் உலகின் 'நம்பர் ஒன்' அணியான ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் போட்டியை நடத்தும் இந்தியா ஆகிய அணிகள் கோப்பையை வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளன.

இந்திய அணி 1971-ல் 3-வது இடத்தையும், 1973-ல் 2-வது இடத்தையும் பிடித்தன. 1975-ம் ஆண்டு அஜித்பால் சிங் பட்டேல் தலைமையிலான இந்தியா உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்தது. அதன் பிறகு இந்திய அணி உலகக் கோப்பையை நெருங்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் கடந்த 48 ஆண்டுகளில் உலகக் கோப்பை போட்டியில் டாப்-4 இடத்திற்குள் கூட வந்ததில்லை. 2018-ம் ஆண்டு போட்டியில் இந்தியா கால்இறுதியோடு வெளியேறியது.

அந்த நீண்ட கால ஏக்கத்தை இந்தியா தணிக்குமா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். அண்மை காலமாக இந்திய ஆக்கி அணி வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளது.டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்று வரலாறு படைத்தது. 2021-22-ம் ஆண்டு புரோ ஆக்கி லீக்கில் 3-வது இடத்தை பெற்றது.

ஆண்டின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், மூத்த கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், மன்பிரீத்சிங், ஹர்திக்சிங், மன்தீப்சிங், அமித் ரோகிதாஸ், ஆகாஷ்தீப்சிங் உள்ளிட்டோர் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர். இவர்கள் நெருக்கடியை திறம்பட சமாளித்தால் போதும். இந்தியாவின் கை ஓங்கி விடும். அணியை ஊக்கப்படுத்தும் வகையில் இந்தியா சாம்பியன் கோப்பையை வென்றால் வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்று ஒடிசா மாநில அரசும், தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று ஆக்கி இந்தியாவும் அறிவித்துள்ளன.

இந்தியா அங்கம் வகிக்கும் 'டி' பிரிவில் இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் கடும் சவால் அளிக்கக்கூடியவை.

உலகத் தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் 8-ம் நிலை அணியான ஸ்பெயினை இன்றிரவு ரூர்கேலாவில் எதிர்கொள்கிறது. இளம் வீரர்களை கொண்ட ஸ்பெயின் அணியினர் தங்களுக்குரிய நாளாக அமைந்து விட்டால் எதிரணியை ஒருகை பார்த்து விடுவார்கள். கடந்த அக்டோபர்-நவம்பரில் இவ்விரு அணிகள் இடையே நடந்த புரோ ஆக்கி லீக்கில் முதல் ஆட்டத்தில் 3-2 என்ற கணக்கில் ஸ்பெயின் வென்றது. அடுத்த ஆட்டம் 2-2 என்று சமன் ஆன நிலையில் பெனால்டி ஷூட்-அவுட்டில் இந்தியா வெற்றி பெற்றது.

முந்தைய புரோ லீக் சீசனிலும் இதே போன்று தான் தலா ஒன்றில் வெற்றி பெற்றன. உலகக் கோப்பை ஆக்கியில் ஸ்பெயினுக்கு எதிராக இதுவரை 6 ஆட்டங்களில் ஆடியுள்ள இந்தியா அதில் 2-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டுள்ளது. எனவே இந்திய வீரர்கள் சிறு தவறுக்கும் இடமின்றி விளையாடினால் தான் ஸ்பெயினை வீழ்த்த முடியும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு இந்தியாவுக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும். தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்று விட்டால் அதன் பிறகு கால்இறுதி வாய்ப்பு சுலபமாகி விடும்.

இந்தியா-ஸ்பெயின் (இரவு 7 மணி) ஆட்டத்தை தவிர்த்து, முதல் நாளில் இங்கிலாந்து-வேல்ஸ் (மாலை 5 மணி) அர்ஜென்டினா- தென்ஆப்பிரிக்கா (பகல் 1 மணி) ஆஸ்திரேலியா-பிரான்ஸ் (மாலை 3 மணி) அணிகளும் மோதுகின்றன. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

21 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா சர்வதேச ஆக்கி ஸ்டேடியத்தில் 20 ஆட்டங்களும், 18 ஆயிரம் இருக்கை வசதி உடைய புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் 24 ஆட்டங்களும் நடக்கின்றன. கால்இறுதி அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டி கலிங்கா ஸ்டேடியத்தில் அரங்கேறுகிறது.

இதில் களம் காணும் இந்திய அணி வருமாறு:- கோல் கீப்பர்கள்: கிரிஷன் பஹதூர் பதாக், பி.ஆர்.ஸ்ரீஜேஷ், தற்காப்பு ஆட்டக்காரர்கள்: ஜர்மன்பிரீத்சிங், சுரேந்தர் குமார், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), வருண்குமார், அமித் ரோஹிதாஸ், நிலம் சஞ்ஜீப், நடுகளம்: மன்பிரீத்சிங், ஹர்திக் சிங், நிலகண்ட ஷர்மா, ஷம்ஷிர் சிங், விவேக் சாகர் பிரசாத், ஆகாஷ்தீப்சிங், முன்களம்: மன்தீப்சிங், லலித்குமார் உபாத்யாய், அபிஷேக், சுக்ஜீத் சிங்.


Next Story