ஆசிய கோப்பை ஆக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை விரட்டியது.
சென்னை,
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இதன் முதலாவது ஆட்டத்தில் ஜப்பான் அணி, அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்ட சீனாவை எதிர்கொண்டது. எதிர்பார்த்தபடியே ஜப்பான் 2-1 என்ற கோல் கணக்கில் சீனாவை தோற்கடித்தது.
அதைத் தொடர்ந்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, மலேசியாவுடன் மோதியது. இதில் 22-வது நிமிடத்தில் மலேசிய வீரர் அபு கமல் அஸ்ராய் கோல் அடித்தார். அதுவே வெற்றியை தீர்மானிக்கும் கோலாக மாறியது. அதன் பிறகு இரு அணிகளுக்கும் பல வாய்ப்புகள் கிட்டினாலும் அதனை கோலாக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிட்டவில்லை. முடிவில் மலேசியா 1-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை சாய்த்தது.
நெருக்கடியில் பாகிஸ்தான்
இரவில் அரங்கேறிய இறுதி லீக்கில் முன்னாள் சாம்பியன்கள் இந்தியாவும், பாகிஸ்தானும் கோதாவில் குதித்தன. போட்டியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து கண்டு ரசித்தார். 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட ரசிகர்களால் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது.
குறைந்தது 'டிரா' செய்தால் தான் அரைஇறுதி வாய்ப்பு கிடைக்கும் என்ற நெருக்கடியுடன் அடியெடுத்து வைத்த பாகிஸ்தான் 2-வது நிமிடத்தில் கோல் போட்டது. அந்த அணியின் அப்துல் ஹனன் பந்தை வலைக்குள் அடித்தார். ஆனால் அவர்களின் உற்சாகம் சில வினாடிகளில் கரைந்து போனது. ேகாலை எதிர்த்து இந்தியா தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது. ரீப்ளேயில் அபாயகரமான ஷாட் அடித்ததாக அந்த கோல் மறுக்கப்பட்டது.
ஹர்மன்பிரீத் சிங் இரட்டை கோல்
இதன் பின்னர் தாக்குதல் பாணியை தொடுத்த இந்திய வீரர்கள் அடுத்தடுத்து பாகிஸ்தானின் கோல் கம்பத்தை முற்றுகையிட்டனர். பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் (54 சதவீதம்), ஷாட் அடிப்பதிலும் இந்தியாவின் கை ஓங்கியது. 15 மற்றும் 23-வது நிமிடத்தில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்து அமர்க்களப்படுத்தினார். இந்த இரட்டை கோலையும் சேர்த்து நடப்பு தொடரில் அவரது கோல் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்தது.
36-வது நிமிடத்தில் ஜக்ராஜ் சிங்கும், 55-வது நிமிடத்தில் ஆகாஷ் தீப்சிங்கும் கோல் போட்டு பாகிஸ்தானை முற்றிலும் சீர்குலைத்தனர். 41-வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங் அடித்த கோல் அபாயகரமான ஷாட் என்று மறுக்கப்பட்டது. உள்ளூர் ரசிகர்களின் உற்சாக கரவொலியுடன் களத்தில் துடிப்புடன் வலம் வந்த தமிழக வீரர் கார்த்தி செல்வத்தின் சில அருமையான ஷாட்டுகளை பாகிஸ்தான் கோல் கீப்பர் தடுத்து நிறுத்தினார்.
பாகிஸ்தான் வீரர்களால் கடைசி வரை ஒரு கோல் கூட திருப்ப முடியவில்லை. அவர்களுக்கு கிடைத்த இரு பெனால்டி கார்னர் வாய்ப்பையும் இந்திய கீப்பர் முறியடித்தார். முடிவில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடியது.
இந்தியா வெற்றி
லீக் சுற்று முடிவில் இந்தியா 4 வெற்றி, ஒரு டிரா என்று 13 புள்ளிகளுடன் முதலிடத்தையும், மலேசியா 12 புள்ளிகளுடன் (4 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடத்தையும் பிடித்தன.
தென்கொரியா, ஜப்பான், பாகிஸ்தான் தலா 5 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் இருந்தன. கோல் வித்தியாசம் அடிப்படையில் தென்கொரியா, ஜப்பான் அரைஇறுதியை எட்டியது. பாகிஸ்தான் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டு அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.
போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கும் அரைஇறுதி ஆட்டங்களில் மலேசியா- தென்கொரியா (மாலை 6 மணி), இந்தியா- ஜப்பான் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன். பாகிஸ்தான் அணி 5-வது இடத்திற்கான ஆட்டத்தில் சீனாவை எதிர்கொள்கிறது.