சென்னையில் ஆகஸ்டு மாதம் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி அட்டவணை அறிவிப்பு
சென்னையில் ஆகஸ்டு மாதம் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.
புதுடெல்லி,
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற ஆகஸ்டு 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது.
தமிழ்நாடு ஆக்கி யூனிட் சார்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, சீனா, ஜப்பான் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ரவுண்ட் ராபின் லீக் முறையில் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.
அட்டவணை அறிவிப்பு
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான அட்டவணையை ஆசிய ஆக்கி சம்மேளனம் நேற்று அறிவித்தது. இதன்படி தொடக்க லீக் ஆட்டத்தில் (ஆகஸ்டு 3)தென்கொரியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன. அதேநாளில் நடைபெறும் மற்ற ஆட்டங்களில் மலேசியா-பாகிஸ்தான், இந்தியா-சீனா அணிகள் சந்திக்கின்றன.
அட்டவணை அறிவிப்புக்கு பிறகு ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவர் திலிப் திர்கே கூறுகையில், 'சென்னையில் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான அட்டவணையை வெளியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி உயரிய இடத்தை பிடிப்பதை பார்க்க ஆவலுடன் இருக்கிறோம்.
போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது சிறந்த திறனை வெளிப்படுத்தும் என்பதால் இந்த தொடர் எல்லா வகையிலும் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும்' என்றார்.