ஆசிய விளையாட்டு: ஆக்கி போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை அறிவிப்பு..!!


ஆசிய விளையாட்டு: ஆக்கி போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை அறிவிப்பு..!!
x

image courtesy; twitter/@TheHockeyIndia

ஆசிய விளையாட்டின் ஆக்கி போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு இந்திய ஆக்கி கூட்டமைப்பு பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

புது டெல்லி,

19-வது ஆசிய விளையாட்டு போட்டி கடந்த மாதம் 23-ந்தேதி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கியது. 45 நாடுகளை சேர்ந்த 12,407 வீரர், வீராங்கனைகள் 40 வகையான போட்டிகளில் பங்கேற்றனர். இதில் இந்தியாவின் 661 வீரர்களும் அடங்குவர். 15 நாட்களாக நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டி நேற்று நிறைவடைந்தது.

இதில் பதக்கப்பட்டியலில் முதல்முறையாக 100-ஐ தாண்டி சரித்திரம் படைத்த இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என்று மொத்தம் 107 பதக்கங்களுடன் 4-வது இடம் பிடித்தது. ஆசிய விளையாட்டில் இந்தியாவின் ஆகச்சிறந்த செயல்பாடு இதுவாகும்.

இதில் ஆக்கி போட்டியில் இந்தியா, ஆண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் மற்றும் பெண்கள் பிரிவில் வெண்கல பதக்கம் வென்று அசத்தியது.

இந்நிலையில் இந்திய ஆக்கி கூட்டமைப்பு பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

அதன்படி தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் அணியின் ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.5 லட்சமும், ஊழியர்களுக்கு தலா ரூ. 2.50 லட்சமும் பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது.

மேலும் வெண்கல பதக்கம் வென்ற இந்திய பெண்கள் அணியின் ஒவ்வொரு வீராங்கனைக்கும் தலா ரூ.3 லட்சமும், ஊழியர்களுக்கு தலா ரூ.1.50 லட்சமும் பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது.

ஆசிய விளையாட்டில் ஆக்கி போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் இந்திய ஆண்கள் அணி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story