ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது

ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டியில் பரபரப்பான அரைஇறுதியில் இந்திய அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
லக்னோ,
ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டியில் பரபரப்பான அரைஇறுதியில் இந்திய அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
ஜூனியர் ஆக்கி
11-வது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி லக்னோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதலில் 14-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் டாம் கிரேக் கோல் அடித்தார். தொடர்ந்து 22-வது நிமிடத்தில் கிடைத்த இரு பெனால்டி கார்னர் வாய்ப்புகளை பயன்படுத்தி கோல் அடிக்க தீவிரம் காட்டிய ஆஸ்திரேலியாவின் முயற்சியை இந்திய கோல் கீப்பர் விகாஸ் தாஹியா தவிடுபொடியாக்கினார்.
உள்ளூர் ரசிகர்களின் உற்சாக ஆதரவுடன் முழுவேகத்தை காட்டிய இந்தியா இரு பெனால்டி கார்னர் வாய்ப்பை நழுவ விட்ட போதிலும் பிற்பாதியில் பதிலடி கொடுத்தது. குர்ஜந்த் சிங் (42-வது நிமிடம்), மன்தீப்சிங் (48) அடுத்தடுத்து கோல் போட இந்தியா முன்னிலை பெற்றது. ஆனால் 57-வது நிமிடத்தில் இந்தியாவின் தடுப்பாட்ட பலவீனத்தை பயன்படுத்தி ஆஸ்திரேலியாவின் லாச்லான் ஷார்ப் கோல் போட்டு ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். இதன் பின்னர் மேற்கொண்டு கோல் ஏதும் விழவில்லை. வழக்கமான 70 நிமிடங்கள் முடிவில் 2-2 என்று சமநிலை நீடித்ததால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
இந்தியா வெற்றி
இதில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 4-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை பதம்பார்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பெனால்டி ஷூட்-அவுட் வாய்ப்பில் இந்திய தரப்பில் கேப்டன் ஹர்ஜீத் சிங், ஹர்மன்பிரீத்சிங், சுமித், மன்பிரீத் ஜூனியர் ஆகியோர் கோலாக மாற்றினர். அதே சமயம் ஆஸ்திரேலிய வீரர்கள் மேத்யூ பேர்டு, ஷார்ப் ஆகியோரின் வாய்ப்புகளை அற்புதமாக தடுத்து அசத்திய இந்திய கோல் கீப்பர் விகாஸ் தாஹியா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
2001-ம் ஆண்டு பட்டத்தை வென்ற இந்திய அணி அதன் பிறகு 15 ஆண்டுகள் கழித்து ஜூனியர் உலக கோப்பையில் இறுதிப்போட்டிக்கு வந்திருக்கிறது.
பெல்ஜியத்துடன்...
முன்னதாக நடந்த மற்றொரு அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனியும், பெல்ஜியமும் சந்தித்தன. இதில் வழக்கமான ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் ஒரு கோல் கூட போடவில்லை. இதையடுத்து கொண்டு வரப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட்டில் பெல்ஜியம் அணி 4-3 என்ற கோல்கணக்கில் 6 முறை சாம்பியனான ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டியை எட்டியது. தொடக்கத்தில் ஜெர்மனியின் பல ஷாட்டுகளில் இருந்து தங்கள் அணியை காப்பாற்றியதுடன், முக்கியமான ஷூட்- அவுட்டில் இரு வாய்ப்புகளை முறியடித்த பெல்ஜியம் கோல் கீப்பர் லாய்க் வான் டோரன் ஆட்டநாயகனாக ஜொலித்தார்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.
Next Story