உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று: மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா வெற்றி !


உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று: மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா வெற்றி !
x

image courtesy; AFP

தென் அமெரிக்க பிராந்தியத்தை சேர்ந்த அணிகளுக்கான புள்ளி பட்டியலில், 15 புள்ளிகளுடன் அர்ஜென்டினா முதல் இடத்தில் உள்ளது.

ரியோ டி ஜெனிரோ,

2026-ல் பிபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான தகுதி சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன . அந்த வகையில் நடந்த தகுதி சுற்றுப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரேசில் அணிகள் மோதின. இந்த போட்டி பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா 1-0 என கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி வெற்றி பெற்றது. அர்ஜென்டினாவின் நிக்கோலஸ் ஒடாமெண்டி 63-வது நிமிடத்தில் கோல் அடித்து அணி வெற்றி பெற உதவினார்.

உலகக்கோப்பை தகுதி சுற்றில் தென் அமெரிக்க பிராந்தியத்தை சேர்ந்த அணிகளுக்கான புள்ளி பட்டியலில், 15 புள்ளிகளுடன் அர்ஜென்டினா முதல் இடத்தில் உள்ளது. உருகுவே 13 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

முன்னதாக இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன் திடீரென பார்வையாளர்கள் அரங்கில் இருந்த இருநாட்டு ரசிகர்களும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். அப்போது மோதலை முடிவுக்கு கொண்டு வர போலீசார், அர்ஜென்டினா ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மெஸ்சி, தனது சக வீரர்களுடன் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

நடுவரிடம் நாங்கள் விளையாட தயாராக இல்லை. வெளியேறுகிறோம் எனக்கூறி சென்றுவிட்டார். பின்னர், மோதல் முடிவுக்கு வந்தது. இதனால், சுமார் அரைமணி நேரம் ஆட்டம் நடைபெறவில்லை. பின்னர் மெஸ்சி விளையாட சம்மதம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அரைமணி நேரம் தாமதமாக ஆட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story