2026-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் இடங்கள் அறிவிப்பு


2026-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
x

2026-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரிச்,

1930-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த உலக கோப்பை போட்டியில் பிரான்ஸ் அணி கோப்பையை உச்சி முகர்ந்தது.

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ஆசிய கண்டத்தில் உள்ள கத்தாரில் வருகிற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடக்கிறது. 2026-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கான உரிமையை 2018-ம் ஆண்டில் வட அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 நாடுகள் இணைந்து பெற்றன.

இந்த உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 32-ல் இருந்து 48 ஆக அதிகரிக்கப்படுகிறது. அத்துடன் உலக கோப்பை கால்பந்து போட்டியை மூன்று நாடுகள் இணைந்து நடத்துவது இதுவே முதல்முறையாகும்.

இந்த நிலையில் 2026-ம் ஆண்டுக்கான உலக கோப்பை போட்டி அரங்கேறும் இடங்களை சர்வதேச கால்பந்து சம்மேளனம் நேற்று அறிவித்தது. இதன்படி அமெரிக்காவில் நியூயார்க் அல்லது நியூஜெர்சி, லாஸ் ஏஞ்சல்ஸ், டல்லாஸ், சான் பிரான்சிஸ்கோ, மியாமி, அட்லாண்டா, சியாட்டில், ஹூஸ்டன், பிலடெல்பியா, கனாஸ் சிட்டி, பாஸ்டன் ஆகிய 11 நகரங்களும், மெக்சிகோவில் மெக்சிகோ சிட்டி, குதலஜாரா, மான்ட்டெரி ஆகிய 3 நகரங்களும், கனடாவில் வான்கூவர், டொராண்டோ ஆகிய நகரங்களும் போட்டி நடைபெறும் இடங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் 60 ஆட்டங்களும், மெக்சிகோ, கனடாவில் தலா 10 ஆட்டங்களும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கால்இறுதி முதல் நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் அமெரிக்காவிலேயே நடைபெறுகிறது.


Next Story