பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து: பனாமாவிற்கு எதிரான ஆட்டத்தில் ஜமைக்கா அணி வெற்றி
ஜமைக்கா அணி 1-0 என்ற கோல் கணக்கில் பனாமாவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது.
பெர்த்,
பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) தகுதி பெறும்.
இதில் 10-வது நாளான நேற்று 3 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. பெர்த் நகரில் 'எப்' பிரிவில் நடந்த ஆட்டத்தில் பனாமா-ஜமைக்கா அணிகள் சந்தித்தன. திரில்லிங்கான இந்த ஆட்டத்தில் ஜமைக்கா அணி 1-0 என்ற கோல் கணக்கில் பனாமாவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. ஜமைக்கா வீராங்கனை அலிசன் ஸ்வாபி 56-வது நிமிடத்தில் அடித்த கோல் அணியின் வெற்றியை முடிவு செய்வதாக அமைந்தது. தொடர்ச்சியாக 2-வது தோல்வியை சந்தித்த பனாமா அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.
'எப்' பிரிவில் இதுவரை நடந்த 2 லீக் ஆட்டங்கள் முடிவில் பிரான்ஸ் (ஒரு வெற்றி, ஒரு டிரா) 4 புள்ளியுடனும், ஜமைக்கா (ஒரு வெற்றி, ஒரு டிரா) 4 புள்ளியுடனும், பிரேசில் (ஒரு வெற்றி, ஒரு தோல்வி) 3 புள்ளியுடனும் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கின்றன. வருகிற 2-ந் தேதி நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களில் பனாமா-பிரான்ஸ், ஜமைக்கா-பிரேசில் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டங்களின் முடிவை பொறுத்தே அடுத்த சுற்றுக்குள் நுழையும் 2 அணிகள் எவை என்பது தெரியவரும்.