பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: ஜமைக்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய கொலம்பியா...!
பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது.
பிரிஸ்பேன்,
பெண்களுக்கான 9-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட 32 அணிகளில் இருந்து 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றான 2வது சுற்றுக்கு (நாக் அவுட்) முன்னேறின.
இந்த 16 அணிகளில் இருந்து காலிறுதிக்கு 8 அணிகள் தேர்வாகும். இந்த தொடரில் இதுவரை ஸ்பெயின், நெதர்லாந்து, ஜப்பான், சுவீடன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறின.
இந்நிலையில் இன்று நடைபெற்ற 2வது சுற்று ( நாக் அவுட் ) ஆட்டத்தில் கொலம்பியா - ஜமைக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதல் பாதி ஆட்டம் கோல் எதுவும் இன்றி 0-0 என முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் கொலம்பிய வீராங்கனை கேடலினா உஸ்மே கோல் அடித்தார்.
அதன் பின்னர் இரு அணி வீராங்கனைகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஜமைக்காவை வீழ்த்தி கொலம்பியா அணி காலிறுதிக்கு முன்னேறியது.