கத்தார் உலக கோப்பை கால்பந்து தொடரின் மறுபக்கம்... 6,500 புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம்..? மறைக்கப்படும் அதிர்ச்சி தகவல்


கத்தார் உலக கோப்பை கால்பந்து தொடரின் மறுபக்கம்... 6,500 புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம்..? மறைக்கப்படும் அதிர்ச்சி தகவல்
x

கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரின் முன்பும், தற்போதும் என மொத்தம் 6,500 புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் அடைந்துள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.


தோஹா,


உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கடந்த நவம்பர் 20-ந்தேதி கோலாகலமுடன் தொடங்கியது.

டிசம்பர் 18-ந் தேதி வரை 29 நாட்கள் 5 நகரங்களில் பிரமாண்டமாக கட்டப்பட்டு இருக்கும் 8 ஸ்டேடியங்களில் போட்டி நடக்கிறது. அரபு நாட்டில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். அத்துடன் ஆசிய கண்டத்தில் இந்த போட்டி நடப்பது 2-வது முறையாகும்.

இந்த போட்டியில் 5 முறை சாம்பியனான பிரேசில், 4 முறை சாம்பியனான ஜெர்மனி, நடப்பு சாம்பியன் பிரான்ஸ், அர்ஜென்டினா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய மற்றும் பிரபலமான விளையாட்டில் முதல் இடத்தில் உள்ள கால்பந்து விளையாட்டிற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளம் உள்ளது.

எனினும், பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் கத்தாரின் மனித உரிமைகள் மீறல் தொடர்பாக பல்வேறு புகார்களையடுத்து வெளிநாட்டு கால்பந்து ரசிகர், ரசிகைகள் உலகக்கோப்பை போட்டிகளை கண்டுகளிக்க கத்தாருக்கு வருவதில் விருப்பம் கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, கத்தாரில் நடந்த உலகக்கோப்பை தொடக்க விழாவில் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு நாடுகளின் கால்பந்து அணியின் உடையை அணிந்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவது தொடர்பான வீடியோக்கள் வைரலாக பரவின. ஆனால், அவை போலியாக இருக்கக்கூடும் என்று தகவல் வெளியானது.

வெளிநாடுகளில் இருந்து ரசிகர், ரசிகைகளின் வருகை பெருமளவு குறைவாக உள்ளதால் பணம் கொடுத்து 'போலி ரசிகர்களை' கத்தார் களமிறக்கியுள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த லட்சக்கண புலம்பெயர்ந்தோர் கத்தாரில் கட்டுமான பணிகள் உள்பட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு, புலம்பெயர் தொழிலாளர்களாக உள்ள ஆயிரக்கணக்கானோரை பணம் கொடுத்து வெளிநாட்டு கால்பந்து ரசிகர்கள் போல சித்தரித்து உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை காண வெளிநாட்டு ரசிகர்கள் குவிந்துள்ளனர் என்பது போன்ற பிம்பம் ஒன்றை உருவாக கத்தார் முயற்சித்து வருகிறது என குற்றச்சாட்டுகள் எழுந்தன.

போட்டிகளை காண மைதானத்திற்கு வரும் பெண் ரசிகைகளின் எண்ணிக்கை குறைவு, ரசிகர்களின் கொண்டாட்டம் செயற்கை தன்மையுடன் உள்ளது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனாலும், கத்தார் நாட்டில் பிபா உலக கோப்பை கால்பந்து போட்டிகளை காண 10 லட்சத்திற்கும் கூடுதலான ரசிகர்கள் பார்வையாளர்களாக வர கூடும் என கணிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, தங்களது நாட்டு அணியின் வெற்றியை ரசிக்கும் ஆவலில் கேலரியில் ரசிகர்கள் தொடர்ந்து போட்டிகளை கண்டு களித்து வருகின்றனர்.

ஆனால், இந்த போட்டி தொடருக்கு முன்பும், போட்டி நடந்து வரும் தற்போதும் என ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களின் மரணம் மறைக்கப்பட்டு உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

போட்டி தொடரின்போதே பிலிப்பினோ தொழிலாளர் ஒருவரது மரணம் பற்றிய கேள்விக்கு கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரின் தலைமை செயல் அதிகாரி நாசர் அல்-காட்டர் கூறும்போது, இது ஊடகங்களால் பரப்பப்படும் பொய்யான தகவல் என கூறியதுடன், மரணம் வாழ்வின் இயற்கையான ஒரு பகுதி என்றும் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

இதற்கு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. கத்தாருக்கு கடந்த 2010-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி நடத்துவதற்கான உரிமை வழங்கப்பட்டது முதல், புலம்பெயர் தொழிலாளர்கள் பலருக்கு காலதாமத ஊதியம் அல்லது சம்பளமே கொடுக்காத நிலை, கட்டாய பணி, கடும் வெப்பத்தில் நீண்டநேர பணி, பணி வழங்கிய உரிமையாளரின் நெருக்கடி, அந்நாட்டு நடைமுறையின்படி வேலையில் இருந்து வெளியேற முடியாத சூழல் போன்ற சிக்கல்களை அவர்கள் எதிர் கொண்டு உள்ளனர் என மனித உரிமை அமைப்புகள் கண்டறிந்து தெரியப்படுத்தி உள்ளன.

இவற்றில், பல புலம்பெயர் தொழிலாளர்கள் இதற்கு விலையாக அவர்களது உயிரை கொடுத்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. சரியான உயிரிழப்பு எண்ணிக்கையை உறுதி செய்வது கடினம் என கூறப்படுகிறது. தி கார்டியன் பத்திரிகையின் செய்தி அறிக்கை ஒன்று, 10 ஆண்டுகளாக புலம்பெயர் தொழிலாளர்களின் கொடூர பணி சூழல் மற்றும் அவர்களின் மரணம் பற்றி 2021-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தின்படி வெளியிடப்பட்டது.

இதன்படி, தெற்காசியாவை சேர்ந்த 6,500 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கின்றது. இந்த புலம்பெயர் தொழிலாளர்கள் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்காளதேசம் மற்றும் இலங்கை நாடுகளில் இருந்து சென்றவர்கள் என அறிக்கை தெரிவிக்கின்றது.

எனினும் பிலிப்பைன்ஸ், கென்யா போன்ற நாடுகளின் தொழிலாளர்கள் விடுபட்ட சூழலில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் 2020-ம் ஆண்டு இறுதி மாதங்களுக்கான மரண எண்ணிக்கையும் கணக்கில் இருந்து விடுபட்டு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

ஆனால், அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்த அதிகாரப்பூர்வ மரணங்களின் எண்ணிக்கை 37 ஆகும். உலக கோப்பை ஸ்டேடியம் கட்டுமானத்தில் உயிரிழந்த நேரடி தொழிலாளர்களின் எண்ணிக்கையிது என குறிப்பிடப்பட்டு உள்ளது. அவர்களிலும் 34 பேர் பணியுடன் தொடர்பற்றவர்கள் என கூறப்படுகிறது.

எனினும், சமீபத்தில் உலக கோப்பை தலைவர் ஹசன் அல்-தவாடி கூறும்போது, போட்டி தொடர் தொடர்புடைய பணிகளில் 400 முதல் 500 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்து இருக்க கூடும் என கூறியுள்ளது முரண்பாடு ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்று பல மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாத நிலையில், தொடர்ந்து போட்டி தொடர் நடந்து வருகிறது.


Next Story