11 அணிகள் பங்கேற்கும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் நாளை தொடக்கம்
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் நாளை தொடங்க உள்ளது.
கொச்சி,
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி 2013-14-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 9-வது இந்தியன் சூப்பர் லீக் (2022-23 சீசன்) கால்பந்து நாளை தொடங்குகிறது.
சென்னையின் எப்.சி., ஏ.டி.கே. மோகன் பகான், பெங்களூரு எப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ், எப்.சி. கோவா, ஐதராபாத், ஜாம்ஷெட்பூர், மும்பை சிட்டி, நார்த் ஈஸ்ட் யுனைடெட், ஒடிசா, ஈஸ்ட் பெங்கால் ஆகிய 11 அணிகள் விளையாடுகின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரி 26-ந்தேதி வரை லீக் ஆட்டங்கள் நடக்கிறது.
மொத்தம் 110 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரை இறுதிக்கு முன்னேறும். புள்ளி பட்டியலில் 3 முதல் 6-வது இடம் வரை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றில் விளையாடும். இதிலிருந்து மேலும் இரண்டு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடக்கும்
இப்போட்டி அட்டவணையில் புதிதாக பிளே-ஆப் சுற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு போட்டியை ரசிகர்கள் நேரில் காண அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கொச்சியில் நாளை நடக்கும் தொடக்க ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
சென்னையின் எப்.சி. அணி தனது முதல் ஆட்டத்தில் வருகிற 10-ந்தேதி ஏ.டி.கே. மோகன் பகான் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் கொல்கத்தாவில் நடக்கிறது. சென்னை அணியின் உள்ளூர் ஆட்டம் (பெங்களூரு அணிக்கு எதிராக) நேரு ஸ்டேடித்தில் 14-ந்தேதி நடக்கிறது.
இது வரை ஏ.டி.கே. மோகன் பகான் அணி மூன்று முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. சென்னையின் எப்.சி. இரண்டு முறையும், பெங்களூரு, மும்பை சிட்டி, ஐதராபாத் ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் பட்டம் வென்றுள்ளன. கடந்த சீசனில் ஐதராபாத் பட்டம் வென்று நடப்பு சாம்பியனாக உள்ளது.