தெற்காசிய கால்பந்து போட்டி பெங்களூருவில் இன்று தொடக்கம்: இந்தியா-பாகிஸ்தான் மோதல்


தெற்காசிய கால்பந்து போட்டி பெங்களூருவில் இன்று தொடக்கம்: இந்தியா-பாகிஸ்தான் மோதல்
x

8 நாடுகள் பங்கேற்கும் தெற்காசிய கால்பந்து போட்டி பெங்களூருவில் இன்று தொடங்குகிறது. முதல் நாளில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு,

தெற்காசிய கால்பந்து போட்டி

14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) முதல் ஜூலை 4-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. இதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, குவைத், நேபாளம், பாகிஸ்தான் அணிகளும், 'பி' பிரிவில் லெபனான், மாலத்தீவு, பூடான், வங்காளதேசம் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

சர்வதேச கால்பந்து சங்கத்தால் இலங்கை இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் அந்த அணி இந்த போட்டிக்கு வர முடியவில்லை. மேற்கு ஆசியாவை சேர்ந்த லெபனான், குவைத் ஆகிய நாட்டு அணிகள் சிறப்பு அழைப்பின் பேரில் இந்த போட்டியில் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

தொடக்க நாளான இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதலாவது லீக் ஆட்டத்தில் (மாலை 3.30 மணி) குவைத்-நேபாளம் அணிகள் மோதுகின்றன. தரவரிசையில் குவைத் அணி 143-வது இடத்திலும், நேபாளம் 174-வது இடத்திலும் இருக்கின்றன.

இந்தியா-பாகிஸ்தான் மோதல்

இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் அணி, இந்தியா வருவதற்கான விசாவுக்கு இந்திய தூதகரம் திங்கட்கிழமை இரவு அனுமதி அளித்து விட்டதால் அந்த அணி வருவதில் நீடித்து வந்த சிக்கல் சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளது.

சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி கடந்த வாரம் நடந்த இன்டன்கான்டினென்டல் இறுதிப்போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் லெபனானை சாய்த்து கோப்பையை வென்ற உத்வேகத்துடன் இந்த போட்டியில் களம் காணுகிறது. தரவரிசையில் 101-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் தனது நல்ல பார்மை தொடருவதுடன் 195-வது இடத்தில் உள்ள பாகிஸ்தானுக்கு எதிராக முழுமையாக ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுனில் சேத்ரி சாதிப்பாரா?

இந்திய கேப்டன் சுனில் சேத்ரி புதிய மைல்கல்லை எட்ட வாய்ப்பு இருக்கிறது. 137 சர்வதேச போட்டிகளில் ஆடி 87 கோல்கள் அடித்து இருக்கும் சுனில் சேத்ரி இன்னும் 3 கோல் போட்டால் சர்வதேச கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கும் மலேசியாவின் மோக்தார் தஹாரியை (89 கோல், 142 ஆட்டம்) பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை பிடிப்பதுடன் அதிக கோல் அடித்த 2-வது ஆசிய வீரர் என்ற பெருமையையும் பெற முடியும்.

இந்த போட்டியை பேன்கோடு செயலியில் பார்க்கலாம்.


Next Story