அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ஷாஜி பிரபாகரன் நீக்கம்!
தற்காலிக பொதுச்செயலாளராக துணை பொதுச்செயலாளர் சத்யநாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
புது டெல்லி,
அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக ஷாஜி பிரபாகரன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தலைவர் கல்யாண் சவுபே தலைமையில் நடந்த முதலாவது செயற்குழு கூட்டத்தில் நியமிக்கப்பட்டார். டெல்லி கால்பந்து சங்க தலைவராக இருந்த அவர் அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றார்.
இந்த நிலையில், 14 மாதங்களாக பொதுச்செயலாளர் பதவியில் இருந்த ஷாஜி பிரபாகரனை அதிரடியாக நீக்கி இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் கல்யாண் சவுபே நடவடிக்கை எடுத்துள்ளார். ஷாஜி பிரபாகரன் செயல்பாடு திருப்திகரமாகவும், நம்பிக்கைக்குரியதாகவும் இல்லாததால் நீக்கப்பட்டு இருப்பதாக கால்பந்து சம்மேளனம் தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர் மீதான நடவடிக்கைக்கு காரணம் எதுவும் சொல்லப்படவில்லை. ஷாஜி பிரபாகரன் நீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், துணை பொதுச்செயலாளர் சத்யநாராயணன் தற்காலிக பொதுச்செயலாளராக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஷாஜி பிரபாகரனின் பணி நீக்கம் குறித்து அகில இந்திய கால்பந்து சம்மேளனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.