இந்திய கால்பந்து சம்மேளன பொதுச்செயலாளராக ஷாஜி பிரபாகரன் நியமனம்


இந்திய கால்பந்து சம்மேளன பொதுச்செயலாளராக ஷாஜி பிரபாகரன் நியமனம்
x

இந்திய கால்பந்து சம்மேளனத்தின் புதிய பொதுச்செயலாளராக டெல்லி கால்பந்து சங்க தலைவர் ஷாஜி பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கால்பந்து சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. தலைவர் பதவிக்கான போட்டியில் முன்னாள் கேப்டன் பாய்ச்சுங் பூட்டியாவை வீழ்த்தி முன்னாள் கோல் கீப்பரும், மேற்குவங்காள பா.ஜ.க. தலைவர்களில் ஒருவருமான கல்யாண் சவுபே வெற்றி பெற்று தலைவரானார். துணைத் தலைவராக கர்நாடக மாநில கால்பந்து சங்க தலைவர் என்.ஏ.ஹாரிஸ்சும், பொருளாளராக கிபா அஜய்யும் (அருணாசலபிரதேசம்) வெற்றி பெற்றனர். 14 செயற்குழு உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இந்திய கால்பந்து சம்மேளனத்தின் புதிய பொதுச்செயலாளராக டெல்லி கால்பந்து சங்க தலைவர் ஷாஜி பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று நடந்த முதலாவது செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதேபோல் புதிய துணை பொதுச்செயலாளராக ஐ லீக் தலைமை செயல் அதிகாரி சுனந்தோ தார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய தலைவர் முன்மொழிந்ததை தொடர்ந்து இந்த நியமனங்களுக்கு செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக அனுமதி வழங்கினர் என்று இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் கேப்டன்கள் ஐ.எம். விஜயன் தொழில்நுட்ப கமிட்டி தலைவராகவும், ஷபிர் அலி ஆலோசனை கமிட்டி தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Next Story