பஞ்சாப் எப்சி ஐஎஸ்எல்-ல் 12வது அணியாக இணைகிறது..!
நடப்பு ஐ-லீக் சாம்பியனான பஞ்சாப் எப்சி, வரும் 2023-24 சீசனில் இந்தியன் சூப்பர் லீக்கில் இணைய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,
2022-23 ஆண்டுக்கான ஐ-லீக் சீசன் முழுவதும் பஞ்சாப் எப்சி தன் அசாதாரண ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 16 போட்டிகளில் வெற்றி, நான்கில் டிரா மற்றும் இரண்டு போட்டிகளில் மட்டுமே தோல்வியை சந்தித்தது. மேலும் அந்த அணி மொத்தம் 45 கோல்களை அடித்து களத்தில் தங்களது திறமையை வெளிப்படுத்தியது. போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்தி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது மட்டுமல்லாமல் பட்டத்தையும் வென்று சாதனை படைத்தது.
இதனால் ஐசிஎல்எஸ் பிரீமியர் 1 உரிமத்தை வெற்றிகரமாக நீக்கியதுடன், ஐஎஸ்எல்-ல் ஆட இடமும் கிடைத்துள்ளது. இதன் மூலம், ஐ-லீக்கில் இருந்து ஐஎஸ்எல்-க்கு பதவி உயர்வு பெற்ற இந்தியாவின் முதல் கிளப் என்ற பெருமையை பஞ்சாப் எப்சி பெற்றுள்ளது.
இது குறித்து ரவுண்டு கிளாஸ் நிறுவனர் சன்னி சிங் கூறுகையில், "ஐஎஸ்எல்-ல் பஞ்சாப் எப்சி இடம் பிடித்திருப்பது எங்கள் வீரர்கள், ஊழியர்களின் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம். ஐஎஸ்எல்-ன் ஒரு பகுதியாக இருப்பது பஞ்சாப் எப்சியின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். ஐஎஸ்எல்-ல் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துவதையும் உத்வேகமாக செயல்படுவதையும் நோக்கமாக கொண்டுள்ளோம்" என தனது உற்சாகத்தை பகிர்ந்து கொண்டார்.