'எனது ஓய்வு காலம் வெகுதொலைவில் இல்லை' - மெஸ்சி சொல்கிறார்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்தார் மெஸ்சி.
பியூனஸ் அயர்ஸ்,
கத்தாரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்த லயோனல் மெஸ்சி கடந்த ஜூன் மாதம் பிரான்சின் பி.எஸ்.ஜி. கிளப்பில் இருந்து விலகி அமெரிக்காவை சேர்ந்த இண்டர் மியாமி கிளப்பில் இணைந்தார்.
மேஜர் லீக் போட்டியில் வருகிற 21-ந் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இண்டர் மியாமி அணிக்காக களம் இறங்க அமெரிக்கா சென்றுள்ள 36 வயது மெஸ்சி அர்ஜென்டினா டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில்,
'எனது வயதை கணக்கில் கொண்டால் இன்னும் எத்தனை நாட்கள் அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து விளையாட முடியும் என்பது தெரியவில்லை. எனது ஓய்வுக்கான காலம் வெகுதொலைவில் இல்லை என்று கருதுகிறேன்.
எனது ஓய்வுக்கான தருணம் எப்போது வரும் என்பது துல்லியமாக தெரியவில்லை. எல்லாவற்றையும் சாதித்து விட்ட நான் தற்போது ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறேன்' என்றார்.