லீக்ஸ் கோப்பை கால்பந்து; இன்டர் மியாமி அணி வெற்றி ...மெஸ்சி 2 கோல்கள் அடித்து அசத்தல்..
லீக்ஸ் கோப்பை தொடரில் தனது 2வது போட்டியில், இன்டர் மியாமி அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
புளோரிடா,
இந்த ஆண்டிற்கான லீக்ஸ் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் அமெரிக்கா கிளப் அணியான இன்டர் மியாமிக்காக கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இந்த ஆண்டு விளையாடி வருகிறார்.
இன்டர் மியாமி அணி தனது முதல் போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற அட்லாண்டா யுனைடெட் அணிக்கு எதிரான போட்டியில் இன்டர் மியாமி அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உள்ளது.
இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி இரண்டு கோல்கள் அடித்து அசத்தி உள்ளார். ஆட்டம் தொடங்கிய 8 வது நிமிடம் மற்றும் 22 வது நிமிடத்தில் அடுத்தடுத்து இரு கோல்கள் அடித்து உள்ளார். மேலும் சக அணி வீரர் கோல் அடிக்கவும் அசிஸ்ட் செய்துள்ளார். எதிர் அணியால் ஒரு கோல் கூட அடிக்கமுடியவில்லை. ஆட்டம் முழுவதும் இன்டர் மியாமியே ஆதிக்கம் செலுத்தியது.
இன்டர் மியாமி அணி வீரர்கள் ராபர்ட் மற்றும் கிறிஸ்டோபர் தலா ஒரு கோல் அடித்தனர். இதன்மூலம், இன்டர் மியாமி அணி 4 -0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் லீக்ஸ் கோப்பை தொடரின் 'ஜே' பிரிவில் 6 புள்ளிகளை பெற்று இன்டர் மியாமி முதலிடத்தில் உள்ளது.
மெஸ்சி இன்டர் மியாமி அணிக்காக 2 போட்டிகளில் விளையாடி 3 கோல்கள் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.