உலகக் கோப்பை கால்பந்து: கரீம் பென்சிமா விலகல்- பிரான்ஸ் அணிக்கு பின்னடைவு


உலகக் கோப்பை கால்பந்து: கரீம் பென்சிமா விலகல்- பிரான்ஸ் அணிக்கு பின்னடைவு
x

Image Courtesy: AFP 

கரீம் பென்சிமா பிபா தரவரிசையில் மெஸ்ஸிக்கு அடுத்ததாக 2-வது இடத்தில் உள்ளார்.

தோகா,

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. கால்பந்து ரசிகர்களை கட்டிபோடப்போகும் இந்த திருவிழா டிசம்பர் 18-ந் தேதி வரை 29 நாட்கள் அரங்கேறுகிறது. அங்குள்ள 5 நகரங்களில் பிரமாண்டமாக கட்டப்பட்டு இருக்கும் 8 மைதானங்களில் போட்டி நடக்கிறது.

இந்த போட்டியில் 5 முறை சாம்பியனான பிரேசில், 4 முறை சாம்பியனான ஜெர்மனி, நடப்பு சாம்பியன் பிரான்ஸ், அர்ஜென்டினா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 அணிகள் கலந்து கொள்கின்றன. இதன் முதலாவது ஆட்டத்தில் கத்தார்-ஈகுவடார் அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் கோப்பையை தக்க வைக்கும் முனைப்புடன் இந்த தொடரில் களமிறங்கியுள்ள பிரான்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா காயம் காரணமாக இந்த உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். இடது தொடையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகுவதாக பிரான்ஸ் கால்பந்து அணி தெரிவித்துள்ளது.

34 வயதான கரீம் பென்சிமா பிபா தரவரிசையில் மெஸ்ஸிக்கு அடுத்ததாக 2-வது இடத்தில் உள்ளார். உலகக் கோப்பையில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3 கோல்கள் அடித்துள்ளார். இந்த ஆண்டுக்கான கால்பந்து உலகில் மிக உயரிய விருதான "பாலன் டி ஆர் விருது" கரீம் பென்சிமாக்கு வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story