ஐ.எஸ்.எல். கால்பந்து; இறுதிப்போட்டியில் மோகன் பகான் - மும்பை சிட்டி அணிகள் இன்று மோதல்
10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் 21-ந் தேதி தொடங்கியது.
கொல்கத்தா,
10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் 21-ந் தேதி தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து தொடரில் லீக் மற்றும் அரையிறுதி சுற்று ஆட்டங்கள் முடிவில் நடப்பு சாம்பியன் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்சும், முன்னாள் சாம்பியன் மும்பை சிட்டி எப்.சி.யும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இவ்விரு அணிகள் மோதும் இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் நடக்கிறது. புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த மோகன் பகான் அணி அரையிறுதியில் ஒடிசாவை தோற்கடித்தும், 2-வது இடம் பிடித்த மும்பை அணி, எப்.சி.கோவாவை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த 2 லீக் சுற்று ஆட்டங்களில் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் மோகன் பகானை வீழ்த்தி மகுடம் சூடியதால் கூடுதல் நம்பிக்கையுடன் மும்பை அணி கால்பதிக்கும்.
அதேநேரத்தில் முந்தைய இறுதி சுற்று தோல்விக்கு பதிலடி கொடுத்து 5-வது முறையாக கோப்பையை வெல்ல மோகன் பகான் வரிந்து கட்டும். அதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.2½ கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.