ஐ.எஸ்.எல் கால்பந்து : பிரேசில் வீரர் வெலிங்டன் பிரியோரியை ஒப்பந்தம் செய்தது ஜாம்ஷெட்பூர் எப்.சி அணி
ஜாம்ஷெட்பூர் எப்.சி அணி பிரேசில் அணியின் மிட்ஃபீல்டர் வெலிங்டன் பிரியோரியை ஒப்பந்தம் செய்துள்ளது.
ஜாம்ஷெட்பூர்,
இந்தியன் சூப்பர் லீக் 2022- 2023 சீசனுக்காக பல்வேறு அணிகள் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன. அந்த வகையில் ஜாம்ஷெட்பூர் எப்.சி அணி புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து அணியை வலுவாக கட்டமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் ஜாம்ஷெட்பூர் எப்.சி அணி கடந்த சில தினங்களுக்கு முன் மிட்பீல்டர் ஜிதேந்திர சிங்கை தக்க வைத்தது. பின்னர் அந்த அணி பிரதிக் சௌதரியை ஒப்பந்தம் செய்தது.
இந்த நிலையில் அந்த அணி தற்போது பிரேசில் அணியின் மிட்ஃபீல்டர் வெலிங்டன் பிரியோரியை ஒப்பந்தம் செய்துள்ளது. இவர் ஜாம்ஷெட்பூர் எப்.சி அணிக்காக இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தின் தொடக்க சீசனில் விளையாடியவர். பின்னர் தற்போது நான்கு சீசன்களுக்குப் பிறகு அதே அணிக்கு திரும்பியுள்ளார்.
அணிக்கு திரும்பியது குறித்து வெலிங்டன் கூறுகையில், "நான் ஏற்கனவே விளையாடிய அணிக்கு திரும்பி உள்ளேன். நான் இந்த அணியுடன் செலவழித்த நேரம் அற்புதமானது. ஜாம்ஷெட்பூர் ரசிகர்களுக்கு முன்பாக மீண்டும் விளையாடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஜாம்ஷெட்பூர் அணி கோப்பையை வெல்ல எனது சக வீரர்களுடன் இணைந்து கடுமையாக போராடுவேன்" என தெரிவித்துள்ளார்.