உலக சாதனை ஒப்பந்தத்தை ஏற்பாரா எம்பாப்பே? - ரூ.2,720 கோடிக்கு இழுக்க சவுதிஅரேபியா கிளப் முயற்சி
கிலியன் எம்பாப்பேயை தங்கள் அணிக்கு இழுக்க சவுதி அரேபியாவைச் சேர்ந்த அல்-ஹிலால் கிளப் ஆர்வம் காட்டுகிறது.
பாரீஸ்,
பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டன் கிலியன் எம்பாப்பே துடிப்பு மிக்க ஒரு வீரர். கடந்த ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 8 கோல்கள் அடித்து கவனத்தை ஈர்த்தார். கிளப் போட்டியை பொறுத்தவரை அவர் அங்குள்ள பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) கிளப்புக்காக 2017-ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். அந்த அணிக்காக இதுவரை 176 ஆட்டங்களில் விளையாடி 148 கோல்கள் அடித்துள்ளார்.
இந்த நிலையில் ஜப்பான், தென்கொரியா ஆகிய ஆசிய சுற்றுப்பயணத்துக்கான பி.எஸ்.ஜி. அணியில் எம்பாப்பே இடம் பெறவில்லை. அவரை தங்கள் அணியில் நீண்ட கால அடிப்படையில் ஒப்பந்தத்தை நீட்டிக்க அணி நிர்வாகம் விரும்பியது. ஆனால் அதற்கு எம்பாப்பே தரப்பில் முறையாக பதில் இல்லை என்று தெரிகிறது. இதன் தொடர்ச்சியாகவே அவருக்கு ஆசிய பயணத்துக்கான அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அவரை தங்கள் அணியில் இருந்து உடனடியாக விடுவிக்க பி.எஸ்.ஜி. கிளப் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இதற்கிடையே, 24 வயதான எம்பாப்பேயை தங்கள் அணிக்கு இழுக்க சவுதி அரேபியாவைச் சேர்ந்த அல்-ஹிலால் கிளப் ஆர்வம் காட்டுகிறது. அவருக்கு ஒரு சீசனுக்காக உலக சாதனை தொகையாக ரூ.2,720 கோடியை சம்பளமாக வழங்க முன்வந்துள்ளது. இதையடுத்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த பி.எஸ்.ஜி. கிளப், அல்-ஹிலாலுக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் ஜாக்பாட் சலுகையை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதில் உறுதி இல்லை.
ஏனெனில் எம்பாப்பே பி.எஸ்.ஜி. நிர்வாகத்துக்கு எந்த கட்டணமும் செலுத்தாமல் நடைமுறை சிக்கலின்றி வெளியேறும் வகையில் அவர்களுடனான ஒப்பந்த காலம் நிறைவடைந்த பிறகு அடுத்த ஆண்டு ஸ்பெயின் நாட்டின் ரியல்மாட்ரிட் கிளப்பில் இணையும் எண்ணத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.